Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேல்முறையீட்டு அதிகாரவரம்பு
குற்றவியல் மேல்முறையீடு எண் 871/2023
(சிறப்பு அனுமதி மனு (குற்றவியல்) எண் 533/2021-இலிருந்து எழுகிறது)
பன்னீர்செல்வம் .... மேல்முறையீட்டாளர்
-எதிர்-
தமிழ்நாடு மாநில அரசு .... எதிர்மேல்முறையீட்டாளர்
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் பேலா எம். திரிவேதி
JUDGMENT
1. அனுமதி வழங்கப்பட்டது.
2. கோயம்புத்தூர், விரைவு நீதிமன்றம், 3-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியால் அமர்வு வழக்கு எண் 192/2016-இல் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்புரை மற்றும் உத்தரவை உறுதிசெய்து, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் குற்றவியல் மேல்முறையீடு எண் 85/2019-இல், மேற்படி மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த 29.03.2019-ஆம் தேதியிடப்பட்ட தீர்ப்புரை மற்றும் உத்தரவுக்கு எதிராக தற்போதைய மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமர்வு நீதிமன்றமானது, இ.த.ச., பிரிவு 302-இன் கீழான குற்றத்திற்கு மேல்முறையீட்டாளரான எதிரியை விடுதலை செய்த அதேவேளையில், இ.த.ச., பிரிவுகள் 304(ii) மற்றும் 506(i)-இன் கீழான குற்றங்களுக்காக அவரை தண்டித்தது, இ.த.ச., பிரிவு 304(ii)-இன் கீழான குற்றத்திற்காக, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ. 5000/- அபராதம் செலுத்திடவும், செலுத்தத் தவறும்பட்சத்தில் மேற்கொண்டு 6 மாத காலம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்கவும், மேலும், இ.த.ச., பிரிவு 506(i)-இன் கீழான குற்றத்திற்காக, ரூ.1,000 அபராதம் செலுத்திடவும், செலுத்தத் தவறும்பட்சத்தில் 4 வார கால சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டது.
3. இந்நீதிமன்றமானது, 13.01.2021-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம், தண்டனையின் அளவு குறித்து மட்டுமே எதிர்மேல்முறையீட்டாளருக்கு அறிவிப்பு அனுப்பியிருந்தது. அதன்படி, தண்டனையின் அளவு குறித்த வரம்புடைய பிரச்சினையின் அடிப்படையிலேயே தரப்பினர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன.
4. அரசுத்தரப்பின் வாதப்படி, மேல்முறையீட்டாளரான எதிரியும், மரணமுற்றவரான மகாலிங்கமும் உறவினர்களாவர். மரணமுற்றவர், மது வாங்கித்தரும்படி மேல்முறையீட்டாளரை தொல்லைப்படுத்தி வந்ததால், அக்குறிப்பிட்ட சம்பவத்திற்கு முன்பு மேல்முறையீட்டாளரும் மரணமுற்றவரும் சண்டையிட்டு வந்தனர். ஆதலால், மேல்முறையீட்டாளர் மரணமுற்றவரின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டதோடு, அவரைத் தீர்த்துக்கட்டுவதற்கும் திட்டம் தீட்டினார். 14.04.2015 அன்று, மேல்முறையீட்டாளரும் இறந்தவரும் தங்கியிருந்த வெள்ளானைப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மேற்படி நாளன்று, மாலை சுமார் 5:00 மணியளவில், மேல்முறையீட்டாளர், மரணமுற்றவரை மது அருந்துவதற்கு வஞ்சகமாக அழைத்தார். மேல்முறையீட்டாளர், மரணமுற்றவருடன் சரத்குமார் சாமி (அ.சா-2) என்பவரையும் அழைத்துக்கொண்டு, நிலம்பூர் சாலையிலுள்ள ஒரு தொலைதூர இடத்திற்குச் சென்றார். மாலை சுமார் 05:15 மணியளவில், மேல்முறையீட்டாளருக்கும் மரணமுற்றவருக்கும் இடையே சண்டை நடந்தது, மேல்முறையீட்டாளர், மரணமுற்றவரின் முகத்தில் திரும்பத்திரும்ப அடித்தார். இறுதியில், மரணமுற்றவர் தனது நிலை தடுமாறி கீழே விழுந்தார். மேல்முறையீட்டாளர் தனது கால்களால் அவரை தரையில் அழுத்தி அவரது கன்னங்களிலும் திரும்பத்திரும்ப அடித்தார். சாட்சியான சரத்குமார் சாமி குறுக்கிட முயன்றபோது, மேல்முறையீட்டாளர் அவரை குறுக்கிட வேண்டாம் என்று அச்சுறுத்தினார். மயக்கமடைந்த மகாலிங்கத்தை (மரணமுற்றவர்) பார்த்து பீதியடைந்த சரத்குமார், அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி (அ.சா.3) என்ற வழிப்போக்கரிடம் தொலைபேசி தருமாறு கேட்டு, மரணமுற்றவரின் சகோதரரான அருள்குமாருக்கு (அ.சா.1) தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த அருள்குமார், தனது சகோதரர் மகாலிங்கத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு அவரது சகோதரர் மகாலிங்கம் மறுநாள் காயங்களின் காரணமாக மரணமுற்றார். இதையடுத்து அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் மேல்முறையீட்டாளரான எதிரிக்கு எதிராக புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார்.
5. கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் திரு. எஸ். நாகமுத்து, மேல்முறையீட்டாளருக்கும் மரணமுற்றவருக்கும் இடையே சம்பவ இடத்தில் சண்டை நிகழ்ந்தது என்றும், மரணமுற்றவரை கொலை செய்வதற்கு மேல்முறையீட்டாளர் முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றும் பணிந்துரைத்தாமுர். மேலும், மேல்முறையீட்டாளர் தகாநிலை அனுகூலத்தை எடுத்துக்கொண்டார் என்றோ அல்லது கொடுமையான அல்லது அசாதாரணமான முறையில் நடந்துகொண்டார் என்றோ குறிப்பிடும் ஆவணம் ஏதுமில்லை என்றும் பணிந்துரைத்தார். அவரை பொறுத்தவரை, ஆவணச்சான்றைப் பரிசீலித்த விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும், இ.த.ச., பிரிவு 302- இன் கீழ் மேல்முறையீட்டாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்து, இ.த.ச., பிரிவு 304(ii)-இன் கீழான குற்றத்திற்காக மட்டுமே அவரை தண்டித்தது. மேலும், மேல்முறையீட்டாளர் ஏற்கெனவே 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளார் என்றும், மேல்முறையீட்டாளர் அனுபவித்துள்ள தண்டனையின் அளவுக்கு ஏற்ப அவரது தண்டனையைக் குறைப்பதற்கான உரிய வழக்கு இது என்றும் பணிந்துரைத்தார். எனினும், அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், இவ்வழக்கு இ.த.ச., பிரிவு 302-க்கு பதிலாக, இ.த.ச., பிரிவு 304 (ii)-இன் கீழ் வரும் எனக் கருதி, மேல்முறையீட்டாளருக்கு 7 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்து ஏற்கெனவே கருணை காட்டியுள்ளது என்றும், அது மேலும் குறைக்கப்படலாகாது என்றும், எதிர்மேல்முறையீட்டாளரான மாநில அரசின் சார்பாக முன்னிலையான கற்றறிந்த வழக்குரைஞர் முனைவர் ஜோசப் அரிஸ்டாட்டில் வாதுரைத்தார்.
6. தரப்பினர்களுக்கான கற்றறிந்த வழக்குரைஞர்களின் பணிந்துரைகள், கீழமை நீதிமன்றங்களால் பதிவுசெய்யப்பட்டுள்ள கருத்துரைகள் மற்றும் காண்முடிவுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பார்க்கையில், மேல்முறையீட்டாளரான எதிரி முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றும், தகாநிலை அனுகூலத்தை எடுத்துக்கொண்டு அல்லது கொடுமையான அல்லது அசாதாரணமான முறையில் நடந்துகொள்ளவில்லை என்றுமாக காண்முடிவைப் பதிவு செய்துகொண்டு, அமர்வு நீதிமன்றம் இ.த.ச., பிரிவு 304(ii)-இன் கீழான குற்றத்திற்காக மேல்முறையீட்டாளரான எதிரிக்கு தண்டனைத் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது. மரணமுற்றவர் மது வாங்கித்தருமாறு மேல்முறையீட்டாளரை அடிக்கடி தொல்லைப்படுத்தி வந்ததார், அதனால் கோபமடைந்ததால், சண்டை நடந்தது. அமர்வு நீதிமன்றம் தண்டனை விதிக்கையில், மேல்முறையீட்டாளரான எதிரி, அவரது வயதான பெற்றோருக்கு ஒரே மகன் என்ற சங்கதியைக் கருத்திற்கொண்டது. அமர்வு நீதிமன்றத்தால் பதிவுசெய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள மேற்படி காண்முடிவுகளைக் கருத்திற்கொண்டு பார்க்கையில், மேல்முறையீட்டாளரான எதிரிக்கு 7 ஆண்டு கால தண்டனைக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக குறைத்து தண்டனை விதித்தால், நீதியின் குறிக்கோள் நிறைவேற்றப்படும் என்பதே இந்நீதிமன்றத்தின் கருத்தாகும்.
7. மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டு, இ.த.ச., பிரிவு 304 (ii)-இன் கீழான குற்றத்திற்காக, 5 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை அனுபவிக்கும்படி மேல்முறையீட்டாளருக்கு உத்தரவிடப்பட்டது. அமர்வு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள எஞ்சிய தண்டனைகளைப் பொறுத்தமட்டில், அவை மாற்றப்படுவதற்கில்லை. அதற்கிணங்க, மேல்முறையீடானது பகுதியாக அனுமதிக்கப்படுகிறது...........… மாண்புமிகு நீதியரசர் திரு. அஜய் ரஸ்தோகி.......… மாண்புமிகு நீதியரசர் பேலா எம். திரிவேதி புதுதில்லி 21.03.2023