Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
உரிமையியல் மேல்முறையீட்டு அதிகாரவரம்பு
உரிமையியல் மேல்முறையீடு எண் 1770-1771/2023
(சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் /2023, வழக்குக் குறிப்பேடு எண் 15448/2020-இலிருந்து எழுகிறது)
ஆர். சுந்தரம் ... மேல்முறையீட்டாளர்(கள்)
-எதிர்-
தமிழ்நாடு மாநில அளவிலான
ஆய்வுக் குழு மற்றும் பலர் ... எதிர்மேல்முறையீட்டாளர்(கள்)
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு. கிருஷ்ணா முராரி
தாமதம் மன்னிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
JUDGMENT
2. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் (இதில் இதற்குப்பிறகு "உயர் நீதிமன்றம்" என்று குறிப்பிடப்படும்) நீ.பே.ம. எண் 28295/2018-இல் மேல்முறையீட்டாளரின் பணி ஓய்வுக்குப் பின்பான ஓய்வூதியப் பலன்கள் மறுக்கப்பட்டதைக் குறித்த அவரது எதிர்ப்புரை தள்ளுபடி செய்யப்பட்டு, பிறப்பிக்கப்பட்டுள்ள 16.04.2019-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவுக்கு எதிராகவும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் சீராய்வு விண்ணப்ப எண் 157/2019-இல் 13.02.2020-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டுள்ள இறுதி உத்தரவு மற்றும் தீர்ப்புரைக்கு எதிராகவும் தற்போதைய மேல்முறையீடு தாக்கல் செய்யப்படுகிறது. பின்புல சங்கதிகள்
3. மேல்முறையீட்டாளர், கொண்டா ரெட்டி சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்கான 15.11.1975-ஆம் தேதியிடப்பட்ட சாதி சான்றிதழின் அடிப்படையில், அவர் எதிர்மேல்முறையீட்டாளரான வங்கியில் எழுத்தர் மற்றும் காசாளராக நியமிக்கப்பட்டார். 38 ஆண்டுகள் பணிகாலத்திற்குப் பிறகு, மேல்முறையீட்டாளர் 3-வது நிலை அலுவலராக ஓய்வு பெற்றார். இருப்பினும், அவர் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது சாதிச் சான்றிதழ் பொய்யானது என்ற காரணத்தின்பேரில், அவரது வருங்கால வைப்பு நிதியைத் தவிர, அவரது அனைத்து ஒய்வூதியப் பலன்களையும் நிறுத்திவைக்க நிறுத்திவைப்பு ஆணை வழங்கப்பட்டது.
4. எதிர்மேல்முறையீட்டாளரான வங்கியில் மேல்முறையீட்டாளரின் பணிகாலத்தின்போது, மாவட்ட ஆட்சியர் (இதில் ஆறாவது எதிர்மேல்முறையீட்டாளர்), எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை இரத்து செய்தார். அதில் மனக்குறையுற்று, மேல்முறையீட்டாளர் நீ.பே.ம. எண் 12546/1998-ஐ தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமானது, 09.08.2009-ஆம் தேதியிட்ட உத்தரவு மூலம், புதிதாக விசாரணை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக் குழுவுக்கு (இதில் முதல் எதிர்மேல்முறையீட்டாளர்) இந்த வழக்கை அனுப்பியது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னருங்கூட, மேல்முறையீட்டாளரின் சாதி நிலைக் குறித்து முடிவுசெய்யப்படாததால், மேல்முறையீட்டாளர் அவரது ஓய்வூதியப் பலன்கள் கைவரப்பெறாமலேயே ஓய்வு பெறுவதற்கு இது வழிவகுத்தது.
5. மேல்முறையீட்டாளர் தனது பணி ஓய்வுக்குப் பின்பான பலன்களைப் பெறுவதற்காக, உயர் நீதிமன்றத்தில் நீ.பே.ம. எண் 19006/2013-ஐ தாக்கல் செய்தார், ஆயினும், அது 04.07.2014-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம் தீர்வு செய்யப்பட்டு, எட்டு வார காலத்திற்குள் விசாரணையை முடிக்கும்படி முதல் எதிர்மேல்முறையீட்டாளருக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் சி.அ.ம.-ஐ தாக்கல் செய்தார், சி.அ.ம. நிலுவையிலுள்ளபோது, மேல்முறையீட்டாளரை விசாரணைக்காக முதல் எதிர்மேல்முறையீட்டாளர் முன்பு முன்னிலையாகும்படி இடைக்கால உத்தரவு ஒன்றை இந்த மாண்புமிகு நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து, மேற்படி சி.அ.ம. திரும்பப்பெறப்பட்டது.
6. இதற்கிடையில், ஐந்தாவது எதிர்மேல்முறையீட்டாளர், விசாரணையை முடித்து, மேல்முறையீட்டாளர் உண்மையிலேயே கொண்டா ரெட்டி சமூகத்தைச் சார்ந்தவரல்லர் என்ற காண்முடிவுடன், 29.11.2017-ஆம் தேதியிடப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், மேல்முறையீட்டாளருக்கு 07.12.2017-ஆம் தேதியிடப்பட்ட காரண விளக்கம் கோரும் அறிவிப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக, மேல்முறையீட்டாளர் காரண விளக்கம் கோரும் அறிவிப்பு மற்றும் விசாரணை அறிக்கையைத் தள்ளுபடி செய்யக் கோரி மற்றொரு நீ.பே.ம. எண் 33207/2017-ஐ தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம், 19.12.2017-ஆம் தேதியிடப்பட்ட உத்தரவு மூலம் அதை அனுமதித்து, காரண விளக்கம் கோரும் அறிவிப்பையும், விசாரணை அறிக்கையையும் செல்லாததாக்கிய அதே வேளையில், ஆய்வுக் குழுவுக்கு இவ்வழக்கைத் திருப்பியனுப்பியது.
7. ஆய்வு குழுவுக்கு வழக்கைத் திருப்பியனுப்பிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, குழு மீண்டும் வழக்கை விசாரித்து, விழிப்புப் பணிக் குழுவின் அறிக்கை மற்றும் மற்ற வல்லுநர்களின் அறிக்கையின் அடிப்படையில், மேல்முறையீட்டாளரின் சாதிச் சான்றிதழ் சரியல்ல என்று தீர்மானித்தது.
8. ஆய்வுக் குழுவின் மேற்படி அறிக்கையில் மனக்குறையுற்ற மேல்முறையீட்டாளர், சாதி சான்றிதழை மீட்டளிக்கக்கோரி நீதிமன்ற அவமதிப்பு மனுவுடன் மற்றொரு நீ.பே.ம. எண் 28295/2018-ஐ தாக்கல் செய்தார், ஆயினும், மேல்முறையீட்டாளருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தின்பேரில் 16.04.2019-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவு மூலம் உயர் நீதிமன்றம் இரண்டையும் தள்ளுபடி செய்தது; அதன்பின்னர், மேல்முறையீட்டாளர், உயர் நீதிமன்றத்தில் சீராய்வு விண்ணப்ப எண் 157/2019-ஐ தாக்கல் செய்தார், ஆயினும் அது 13.02.2020-ஆம் தேதியிடப்பட்ட இரண்டாம் எதிர்ப்புக்குள்ளான உத்தரவு மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது. பகுப்பாய்வு
9. மேல்முறையீட்டாளருக்காக முன்னிலையான மூத்த வழக்குரைஞர் திரு. ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் திரு. எஸ். பிரபாகரன் ஆகியோர், 19.12.2017-ஆம் தேதியிடப்பட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு மேல்முறையீட்டாளருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்றும், எதிர்மேல்முறையீட்டாளர் சார்ந்துநின்ற ஆவணங்களின் நகல்கள் அனைத்தும் மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், ஆயினும், அது செய்யப்படவில்லை என்றும் கடுமையாக வாதிட்டார். மேலும், மேல்முறையீட்டாளருக்கு நிறுத்திவைப்பு ஆணை வழங்கப்பட்ட சமயத்தில், அவர் மீது எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை, இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையில், அவர் கிட்டத்தட்ட 19 ஆண்டு காலங்களாக தொந்தரவுக்குள்ளாகியுள்ளார் என்றும் வாதுரைக்கப்பட்டது.
10. மாறாக, எதிர் மேல்முறையீட்டாளர்களுக்காக முன்னிலையான மூத்த வழக்குரைஞர், திரு. கோபால் சங்கரநாராயணன் மற்றும் கோப்பிலுள்ள வழக்குரைஞரான திரு. ஜோசப் அரிஸ்டாட்டில், மேல்முறையீட்டாளருக்கு முறையாக அறிவிப்பு வழங்கப்பட்டது என்றும், வழக்கு விசாரணையில் மேல்முறையீட்டாளர்தான் ஆஜராகவில்லை என்றும் வாதிட்டனர். மேல்முறையீட்டாளர் ஆஜராகவில்லை என்பதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்றும், ஆனால் ஒத்திவைப்புக்குப் பிறகும் மேல்முறையீட்டாளர் ஆஜராகவில்லை என்பதால், குழுவுக்கு ஒருதலையாக முடிவு காண்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் வாதிடப்பட்டது.
11. இரு தரப்பினர்களின் வாதங்களையும் கருத்திற்கொண்டு பார்த்தால், ஓய்வூதியப் பலன் பெறும் உரிமை என்பது அரசமைப்புச் சட்டஞ்சார்ந்த உரிமையாகும், ஜார்க்கண்ட் மாநில அரசு மற்றும் ஒருவர் -எதிர்- ஜிதேந்திர குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் ஒருவர்1 என்ற வழக்கில் தீர்மானித்துள்ளபடி, அவ்வுரிமையை முறையாக நியாயப்படுத்தாமல் பறித்துவிட இயலாது என்பதை நாங்கள் தொடக்கத்திலேயே குறிப்பிட விரும்புகிறோம். தீர்ப்புரையின் தொடர்புடைய பத்தி இதில் எடுகுறிப்பிடப்பட்டுள்ளது: 1 (2013) 12 எஸ்.சி.சி. 210 “15. மேற்கு வங்க மாநில அரசு -எதிர்- ஹரேஷ் சி. பானர்ஜி [(2006) 7 எஸ்.சி.சி. 651:2006 எஸ்.சி.சி. (எல் & எஸ்) 1719] என்ற வழக்கில், 20.6.1979-ஆம் நாள் முதற்கொண்டு,1978-ஆம் ஆண்டு, அரசமைப்புச் (நாற்பத்து நான்காவது திருத்தம்) சட்டம் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் வகுமுறைக்கூறு 19(1)(எப்) மற்றும் வகுமுறைக்கூறு 31(1) இரத்து செய்யப்பட்ட பிறகும், சொத்துக்கான உரிமை இனிமேல் அடிப்படை உரிமையாக இருக்காது என்றாலுங்கூட, அது, அரசமைப்புச் சட்டத்தின், வகுமுறைக்கூறு 300-அ-இல் வகைசெய்யப்பட்டுள்ளபடி, இதுவரையிலும் அரசமைப்புச் சட்டப்படியான உரிமையாகவே இருந்துவந்தது என்பதை இந்நீதிமன்றம் அங்கீகரித்தது. ஓய்வூதியம் பெறும் உரிமை என்பது சொத்துரிமையாக கருதப்பட்டது. அதாவது, அவ்வழக்கில் குறிப்பிட்ட சூழ்நிலைகளின்கீழ் ஒய்வூதியத்தை அல்லது அதன் பகுதி எதனையும் நிறுத்தி வைப்பதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ ஆளுநருக்கு உரிமையளிக்கும் 1971-ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநில பணி (இறப்பு மற்றும் ஓய்வூதியப் பலன்கள்) விதிகளின், விதி 10(1) மீறப்பட்டிருப்பதைக் குறித்து எதிர்த்துரைக்கப்பட்டது, மேலும் அந்த எதிர்ப்புரை இந்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
16. ஓய்வூதியம் பெறும் உரிமையானது, ஒரு “சொத்துரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற சட்டக் கோட்பாட்டிற்கு இசைவாணையுள்ளது என்ற சங்கதி உள்ளது.....… அந்த வாதக்கூறின் அடிப்படையில் நாம் சென்றால், இந்தீர்ப்புரையின் தொடக்கத்தில் எங்கள் முன்பு வைக்கப்பட்ட வினாவுக்கான விடை மிகத் தெளிவாக உள்ளது. சட்டப்படியான ஆணையின்றி ஒரு நபரிடமிருந்து இந்த ஓய்வூதியத்தைப் பறித்துவிட முடியாது, இதுவே அரசமைப்பின் வகுமுறைக்கூறு 300-ஏ- இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசமைப்புக் கட்டளையாகும். இதைத் தொடர்ந்து, எந்தவொரு சட்ட வகையமும் இல்லாமல், நிர்வாக அறிவுறுத்தலின் கீழ் ஓய்வூதியத்தில் அல்லது பணிக்கொடையில் அல்லது விடுப்பினைப் பணமாக்குதலில் ஒரு பகுதியை மேல்முறையீட்டாளர் பறிக்க முயல்வதற்கு ஒப்புதல் அளிக்கமுடியாது.
12. மேலும், டாக்டர் உமா அகர்வால் -எதிர்- உ.பி. மாநில அரசு2 என்ற வழக்கில், ஓய்வூதியப் பலன்கள் வழங்கல் என்பது வளங்கொழிக்கும் ஆதாயம் அல்ல, அது ஒரு பணியாளரின் உரிமையாகும் என்ற வகையில் அதனை முறையான நியாயப்படுத்தலின்றி மறுத்துவிட முடியாது.
13. இங்குள்ள எதிர்மேல்முறையீட்டாளர்கள் மேல்முறையீட்டாளரிடம் நடந்துகொண்ட முறை இந்நீதிமன்றத்தை திகைக்கச் செய்கிறது என்பதை நாங்கள் முதலிலேயே குறிப்பிட விரும்புகிறோம். மேல்முறையீட்டாளர், பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, அவர் பழங்குடியின விண்ணப்பதாரர் என்று கூறப்படுவதற்கு ஆதரவாக தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, அந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெற்றார். இருப்பினும், பணியில் அமர்த்தப்பட்ட பிறகும், மேல்முறையீட்டாளரின் தலைக்குமேல் கத்தி ஊசலாடிக் கொண்டிருப்பதுபோல், மேல்முறையீட்டாளரின் ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்த மறுமதிப்பீடு 19 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
14. எதிர்மேல்மறையீட்டாளர்-வங்கியில் 38 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மேல்முறையீட்டாளார், முறையான விசாரணை ஏதுமின்றி பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது நிறுத்திவைப்பு ஆணையைப் பெற்றுக்கொண்டார். மேலும், 1-ஆம் எதிர்மேல்முறையீட்டாளருக்கு தகவல் அளிக்கப்பட்ட நாளன்று, நிறுத்திவைப்பு ஆணை வழங்கப்பட்ட தேதியில், மேல்முறையீட்டாளருக்கு எதிராக வழக்கு ஏதும் நிலுவையில் இல்லை என்று கண்டறியப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை, அலைகழிப்புக்குள்ளாக்கியதும் மிகத் தெளிவாக உள்ளது, மேலும் மேல்முறையீட்டாளரின் மீதும், அவரது ஓய்வூதியப் பலன்களுக்கு அவருக்குள்ள உரிமைக்கு எதிராகவும் ஒரு தீய நோக்கம் இருப்பதாகவும் தோன்றுகிறது. 38 ஆண்டுகள் பணிக்காலத்திற்குப் பின்னர், வழக்கின் தகுதிப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், மேல்முறையீட்டாளர் மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்ற சங்கதியும், தலைமேல் கத்தி 2 (1999) 3 எஸ்.சி.சி. 438 ஊசலாடுவதைப்போன்ற தாமதமாக நடைமுறையைப் பயன்படுத்துவதும் அலைக்கழித்தலாகவே விளக்கமளிக்கப்பட முடியும்.
15. மாதுரி பட்டேல் மற்றும் ஒருவர் -எதிர்- கூடுதல் ஆணையர், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை மற்றும் பலர்3 என்ற வழக்கில், சாதி சான்றிதழைச் சரிபார்க்கும் முறையை எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த நீதிமன்றம் பதினைந்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேற்படி தீர்ப்புரையின் தொடர்புடைய பகுதி கீழே எடுத்துரைக்கப்பட்டுள்ளது: “தவறான சமூகத் தகுதிச் சான்றிதழின் அடிப்படையில், தவறாகப் பெறப்படும் சேர்க்கையோ அல்லது தவறான நியமனமோ அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உண்மையான பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள பலன்களை கட்டாயமாக மறுப்பதாகிவிடும். சமூகத் தகுதிச் சான்றிதழ் இல்லாததால், உண்மையான விண்ணப்பதாரர்கள் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கோ அல்லது ஒரு மாநில அரசின் கீழ் உள்ள அலுவலகங்களில் அல்லது பணியிடங்களில் நியமனங்கள் செய்யப்படுவதற்கும் மறுக்கப்படுகின்றனர். தவறான ஆதாயமடையும் தகுதியற்ற அல்லது போலியான நபர்கள், காலங்கடத்தும் சூழ்ச்சிமுறைகளைக் கையாண்டு, ஆய்வுக் குழுவால் விசாரணைகளை முடிப்பதில் தடை ஏற்படுத்துவர். கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பொதுவாக பெற்றோர்கள்தான் விண்ணப்பிப்பர், ஏனென்றால் அக்காலகட்டத்தில் ஒரு மாணவர் இளவராகவே இருப்பார் என்பது உண்மைதான். தவறான தகுதிச் சான்றிதழைக் கோரும் பெற்றோரோ காப்பாளரோ மோசடியில் ஈடுபடலாம். எனவே, வழங்கப்படும் சான்றிதழ்களை மிக விரைவாகவும், துரிதமாகவும் உரிய காலத்தில் ஆய்வு செய்வது அவசியம். இந்த நோக்கத்திற்காக, சமூகத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடைமுறையையும், அவற்றின் ஆய்வையும், அவற்றின் ஒப்பளிப்பையும் 3 (1994) 6 எஸ்.சி.சி. 241 சீரமைப்பது அவசியமாகிறது, அது பின்வருமாறு: (வலியுறுத்திக் கூறப்பட்டது) 9… விசாரணையை இரண்டு மாதங்களுக்கு மிகாமல், தினசரி நடவடிக்கைகளின் மூலம் கூடுமானவரையில் மிக விரைவாக முடிக்கவேண்டும். விசாரணைக்குப் பிறகு, சாதி ஆய்வுக் குழு அது பொய்யான அல்லது போலியான கோரிக்கை என்று கண்டறிந்தால், அவர்கள், வழங்கப்பட்ட சான்றிதழை இரத்து செய்து, பறிமுதல் செய்வதற்கான ஓர் உத்தரவைப் பிறப்பிக்கலாம். அது, விசாரணை முடிவடைந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் விசாரணையின் முடிவு குறித்து பெற்றோர்/காப்பாளர் மற்றும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
10. நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதில் ஏதேனும் காலதாமதம் ஏற்படுமானால், அதற்கிடையே கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு அல்லது அலுவலர் பணியிடத்திற்கு நியமனம் செய்வதற்கான கடைசி நாள் காலாவதியாகும்பட்சத்தில், அந்த விண்ணப்பதாரர், முதல்வராலோ அல்லது அதன் சார்பாக தகுதிபெற்ற அத்தகைய மற்ற அதிகாரியாலோ, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சமூகத் தகுதிச் சான்றிதழின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்/ காப்பாளர்/ விண்ணப்பதாரரால் உரிய அலுவலர் அல்லது அலுவல்முறை சாராதவர் முன்பாக முறையான உறுதிமொழி ஆவணம் அளிக்கப்படுவதன் அடிப்படையிலோ சேர்க்கப்படலாம் அல்லது நியமிக்கப்படலாம் மற்றும் ஆய்வுக் குழுவின் விசாரணையின் முடிவுக்குட்பட்டே அத்தகைய சேர்க்கையும் அல்லது பணிநியமனமும் தற்காலிகமானதாகவே இருக்கவேண்டும். 15.....பெறப்பட்ட சான்றிதழ் பொய்யானது என்பதாக ஆய்வுக் குழுவால் ஒரு காண்முடிவு பதிவு செய்யப்பட்டவுடன், ஆய்வுக் குழு, அதை உடனடியாக இரத்து செய்து, பறிமுதல் செய்வதோடு, சேர்க்கை அல்லது பணி நியமனத்தை இரத்து செய்யக் கோரி, ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் தொடர்புடைய கல்வி நிறுவனத்திற்கு அல்லது நியமன அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். கல்வி நிறுவனத்தில் சேர்க்கைக்கான பொறுப்பு வகிக்கும் முதல்வர் அல்லது நியமன அதிகாரி, போன்றோர் மேற்கொண்டு அறிவிப்பு ஏதுமின்றி, விண்ணப்பதாரரின் சேர்க்கை/நியமனத்தை இரத்து செய்வதோடு, மேற்கொண்டு படிப்பைத் தொடருவதற்கோ அல்லது அலுவலகப் பணியில் தொடருவதற்கோ தடை விதிக்கவேண்டும்.
16. சாதிச் சான்றிதழின் சரிபார்ப்பு முறையை விரைந்து முடிக்கவேண்டும் என்று இந்நீதிமன்றத்தால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய வழக்கில், மேலே குறிப்பிட்டபடி, 19 ஆண்டுகள் எனும் அளவுக்கு அளவுக்கதிகமானதும் விளக்கப்படாததுமான தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இதனை “உரிய காலம்” என்ற வரம்புக்குள் அந்தக் கால அளவை அடக்கிவிடமுடியாது.
17. மேலும், மேல்முறையீட்டாளர் பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழிந்த பின்னரே, எதிர்மேல்முறையீட்டாளரான குழு, இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது என்றாலும், மேல்முறையீட்டாளர் சான்றளித்து, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்படாததால், இயற்கை நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன என்ற காரணங்களின்பேரில், அது உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு புதிய விசாரணை நடத்தப்பட்டு, மற்றொரு அறிக்கை மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது என்றாலும் இந்த அறிக்கையும் முந்தைய அறிக்கையைப் போலவே அதே தவறினால் பாதிக்கப்படுகிறது, ஏனெனில் இங்கும்கூட, மேல்முறையீட்டாளருக்கு கேட்புகை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
18. மேல்முறையீட்டாளர், நடவடிக்கைகளின் அறிவிப்பு பெற்ற பிறகும் அதில் முன்னிலையாகாததால், ஒருதலைபட்சமாக அடுத்தடுத்த அறிக்கை வழங்கப்பட்டது என்று உயர் நீதிமன்றம் அதன் எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புரையின் காண்முடிவுகளில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், மேல்முறையீட்டாளர் தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார். மேல்முறையீட்டாளருக்கு சார்வு செய்யப்பட்ட அறிவிப்பானது, உண்மையில் திரு. சுதர்சனுக்குத்தான் சார்வு செய்யப்பட்டது என்பதும், அது அஞ்சல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதும், அதை அஞ்சல் தாளில் காணலாம் என்பதும் கையிலுள்ள சான்றாதாரத்தை சாதாரணமாகப் பார்வையிடுவதிலிருந்து தெரியவருகிறது.
19. மறு ஆய்வு நடவடிக்கைகளின்போது, இந்தச் சங்கதி மேல்முறையீட்டாளரால் கொண்டுவரப்பட்டது என்றாலும், உயர் நீதிமன்றம் அத்தகைய காண்முடிவைப் பரிசீலிக்கத் தவறியதோடு, அதில் எழுப்பப்பட்டுள்ள காரணங்களைக் கவனத்தில் கொள்ளாமல் மறு ஆய்வைத் தள்ளுபடி செய்ததால், தீர்ப்புரை வெளிப்படையான பிழையால் பாதிப்படைகிறது என்பதாகும்.
20. மேல்முறையீட்டாளருக்கு கேட்புகைக்கான வாய்ப்பு வழங்கப்படாததால், இயற்கை நீதிக் கோட்பாடான “இருதரப்பினரையும் கேட்டல்“ என்ற கோட்பாடும் மீறப்பட்டுள்ளது. மேல்முறையீட்டாளர், தான் ஒரு சமூகத்தைச் சார்ந்திருப்பது குறித்த உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் ஒரு வழக்கு நடவடிக்கையில், அந்த வழக்கு நடவடிக்கையின் தன்மையைக் கொண்டு, அவருக்கு கேட்புகைக்கான உரிமை அளிக்கப்படவேண்டும், மேலும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கான உரிமை அளிக்கப்படவேண்டும் என்பன அவரது பணியமர்த்தல் தொடர்பான கேள்வி மட்டுமல்ல, அவரது தன்மானத்தை, அதாவது அவரது அடையாளத்தைப் பாதிக்கின்ற விசயமுங்கூட. முடிவு
21. போலியான சாதி சான்றிதழின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டால், பணி ஓய்வுக்குப் பின்பான பலன்கள் வழங்கப்பட இயலாது என்பதைச் சட்டம் அறுதியிடுகிறது என்பதை நாங்கள் இக்கட்டத்தில் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இருப்பினும், தற்போதைய வழக்கில் மிகவும் தெளிவான வேறுபாடு உள்ளது. மேல்முறையீட்டாளரின் சாதி சான்றிதழ் போலியானது என்று எதிர்மேல்முறையீட்டாளர்கள் கோரும் அதேவேளையில், அக்கோரிக்கை நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. மேல்முறையீட்டாளரின் சாதிச் சான்றிதழ் போலியானது என்று அறிவிக்கின்ற இரண்டு அறிக்கைகளும் மட்டுமீறியதும் விளக்கப்படாததுமான தாமதத்திற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், இரண்டு அறிக்கைகளும் மேல்முறையீட்டாளரின் பங்கேற்பை அனுமதிக்கவில்லை.
22. பட்டியலின பழங்குடியினரைப் பொறுத்தவரையில் சாதி சான்றிதழ், வெறும் ஒரு துண்டுக் காகிதத்தைப் போன்றதல்ல, அது பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஓர் இனத்தைச் சார்ந்த நபரின் ஒப்புகையாகும். வரலாற்றுக்கால அநீதியின் அடிப்படையில், பட்டியலின பழங்குடியினர் மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் சில உரிமைகளை உறுதி செய்கிறது, காகிதத்திலிருந்த அந்த உரிமைகளை உண்மை வாழ்வில் கொண்டுவருவதற்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதிச் சான்றிதழ் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிடுகிறது. இந்தச் சான்றிதழ் வரலாற்று ஒப்புகையாக இருக்கும் அதேவேளையில், அரசமைப்பு உரிமைகளை உண்மையாகக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மாறுவதன் மூலம் இதுபோன்ற வரலாற்று அநீதியை சரிசெய்ய முயற்சிக்கிறது. சாதிச் சான்றிதழின் செல்லுந்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் சூழ்நிலையில், ஆவணத்தின் முக்கியத்துவத்தையும், அது மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்திற்கொண்டு, மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, ஆவணத்தை கேள்விக்குள்ளாக்கும் வழக்கு நடவடிக்கைகளை ஒருதரப்புக்கு சாதகமாக்கிவிட முடியாது.
23. ஒரு நபரின் முழுமையான அடையாளமும், அவரது கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால உரிமைகளும் எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டால், அவர் நியாயமாகக் கேட்கப்படுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பையாவது அவருக்கு வழங்கிவிட வேண்டும். இருப்பினும், இவ்வழக்கில், அத்தகையதோர் உரிமை மேல்முறையீட்டாளருக்கு மறுக்கப்பட்டுள்ளது, எனவே, சான்றிதழின் தன்மையை மறுத்துரைக்க எதிர்மேல்முறையீட்டாளர்களுக்கு உள்ள மெய்ப்பிக்கும் பொறுப்பு நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு மெய்ப்பிக்கும் பொறுப்பு நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நீதிமன்றம், மேல்முறையீட்டாளரின் சாதி சான்றிதழை உண்மையானதாகக் கருதவேண்டும்.
24. மேற்குறிப்பிடப்பட்ட விவாதங்களின் அடிப்படையில், இரு எதிர்ப்புக்குள்ளான உத்தரவுகளும் தள்ளுபடி செய்யப்படுவதற்குரியன என்று நாங்கள் கருத்துரைக்கிறோம், மேலும், மேல்முறையீட்டாளரின் 38 ஆண்டுகள் நீண்டகால பணியின் மூலம் அவருக்கு கிடைக்கக்கூடிய பணி ஓய்வுக்குப் பின்பான பலன்களை அவர் பெறுவதற்குரியவர் என்று தீர்மானிக்கிறோம். வழங்கப்படவேண்டிய பணத்தை தேவையின்றி நிறுத்திவைத்ததன் காரணமாக, நிலுவைத் தொகை செலுத்தவேண்டிய நாளிலிருந்து உள்ளபடியாக பணம் செலுத்தப்படும் நாள்வரை மேல்முறையீட்டாளருக்கு மறுக்கப்பட்டுள்ள பணி ஓய்வுக்குப் பின்பான பலன்கள் அனைத்தையும் 6% சாதாரண வட்டி விகிதத்துடன் வழங்கிட எதிர்மேல்முறையீட்டாளர்-வங்கிக்கு உத்தரவிடப்படுகிறது.
25. இதன் விளைவாக, மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. செலவுத்தொகை குறித்து உத்தரவு ஏதுமில்லை...................மாண்புமிகு நீதியரசர் திரு. அனிருத்தா போஸ்.................மாண்புமிகு நீதியரசர் திரு. கிருஷ்ண முராரி புதுதில்லி, 17-03-2023 பொறுப்புத்துறப்பு "வட்டார மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்தீர்ப்புரையானது, வழக்காடி, தன்னுடைய மொழியில் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்கும் உட்பட்டதேயன்றி, வேறெந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாகாது. அனைத்து நடைமுறையான மற்றும் அலுவல்முறையான நோக்கங்களுக்கும் மற்றும் தீர்ப்புரையை நிறைவேற்றலுக்கும், செயற்படுத்தலுக்கும் அதன் ஆங்கிலப் பதிப்பே அதிகாரப்பூர்வமானதாகும்.”