Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேல்முறையீட்டு அதிகாரவரம்பு
குற்றவியல் மேல்முறையீடு எண் 1741/2010
உதயகுமார் ...மேல்முறையீட்டாளர்
-எதிர்-
தமிழ் நாடு மாநில அரசு ... எதிர்மேல்முறையீட்டாளர்
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு.சஞ்சய் கரோல்
JUDGMENT
1. மேல்முறையீட்டாளரான உதயகுமார் (எ-2) என்பவர் புருஷோத்தமன் என்பவரை கொலை செய்ததற்காக, இந்திய தண்டனைச் சட்டம், 1860, பிரிவு 302-இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் புரிந்தமைக்காக, இரு கீழமை நீதிமன்றங்களாலும் தண்டிக்கப்பட்டார். அதனையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், குற்றவியல் மேல்முறையீடு எண்கள் 17, 22 மற்றும் 24-இல், “உதயகுமார் மற்றும் ஒருவர் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு” என்ற வழக்கில் உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள 15.03.2010-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புரை மூலம், இந்திய தண்டனைச் சட்டம், 1860, பிரிவு 120-ஆ-இன் கீழான குற்றம் தொடர்பாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2. மேற்கண்ட அதே எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புரையின் அடிப்படையிலேயே, பன்னீர்தாஸ் (எ-1) மற்றும் பெரியசாமி (எ-3) ஆகிய மற்ற இரண்டு உடன்-எதிரிகளும் இரண்டு குற்றங்கள் தொடர்பாக அதாவது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 மற்றும் 120-ஆ-இன் கீழ் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அதன் விளைவாக, தற்போதைய மேல்முறையீடானது, குற்றவாளி உதயகுமாரால் (எ-2) தாக்கல் செய்யப்பட்டது.
4. பன்னீர்தாஸ் (எ-1), இறந்தவருடன் (புருஷோத்தமன்) தொழில்முறை உறவு வைத்திருந்தார் என்ற கணிப்பின்பேரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை 23 சாட்சிகளின் சாட்சியங்களின் மூலம் அரசுத்தரப்பு நிரூபிக்க முயற்சி செய்துள்ளது. இருவருக்கும் இடையே சில பிரச்சினைகளும், தொழில் பகைமையும் இருந்துவந்ததால், முந்தையவர், பிந்தையவர் மீது பகைமையை வளர்த்தார். அதன் விளைவாக, அவர், எ.[3] உடன் சேர்ந்துகொண்டு, இறந்தவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார், அதை நிறைவேற்றும்பொருட்டு 2-ஆம் எதிரியை நியமித்தார். 22.10.2008 அன்று இரவு சுமார் 8:30 மணியளவில், எ-2, இறந்தவரின் கழுத்தில் அரிவாளால் வெட்டிக் கொன்றார். அதன்பிறகு, உடனடியாக எ-1-ம், எ-3-ம் வாகனத்தில் வந்தனர், அதில் எ-2, திறந்தவெளி பொது சாலையான குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இறந்தவருக்கு தெரிந்தவரான வெங்கடேசன் (அ.சா-1) இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தார். இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 22.10.2008-ஆம் தேதியன்று மு.த.அ. எண் 2261/2008-ஆனது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. காவல் அலுவலர் குப்புசாமி (அ.சா.23) விசாரணையை மேற்கொண்டார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றியப் பின்னர், மருத்துவர் கே. மதிஹரன் (அ.சா.21) சடலக்கூறாய்வை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், எ-1 மற்றும் எ-3-இன் உடந்தை இருப்பது தெரியவந்தது. எனவே, பிந்தையவர் 16.12.2009 அன்று கைது செய்யப்பட்டார், அவர் குற்றம் புரிந்ததற்கான காரணத்தையும், முறையையும் தெரிவித்தார்.
5. புலனாய்வு முடிந்தவுடன், குற்ற அறிக்கை, விசாரணைக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமர்வு வழக்கு எண் 113/2009-இல் மாநில அரசு -எதிர்- பன்னீர்தாஸ் மற்றும் ஒருவர் என்ற வழக்கில், 04.12.2009 தேதியிடப்பட்ட தீர்ப்புரை மூலம், அறிவார்ந்த விசாரணை நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்து எதிரிகளையும் குற்றவாளிகளென தீர்மானித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
6. குறிப்பிடத்தக்க வகையில், உயர் நீதிமன்றமானது, அரசுத்தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களை நம்ப மறுத்து, சதித்திட்ட வழக்கை நிராகரித்து, எ-1 மற்றும் எ-3-ஐ அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவித்தது, மேலும், எ-2, அ.சா.1-ஆல் அடையாளம் காட்டப்பட்டதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 302-இன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்திற்கான குற்ற மற்றும் தண்டனைத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. எ-1 மற்றும் எ-3-இன் விடுதலை தீர்ப்புக்கு எதிராக அரசுத்தரப்பால்/மாநில அரசால் எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது பதிவுக்குரிய விடயமாகும். எனவே, எ-2-இன் குற்றம் அல்லது குற்றமற்றத் தன்மையை விசாரிப்பதற்கு மட்டுமே இந்நீதிமன்றம் கோரப்பட்டுள்ளது.
7. எ-2 தான், தாக்கியவர் என்பதாக அ.சா-1-ஆல் அடையாளம் காட்டப்பட்டதைத் தவிர, குற்றத்தில் மேல்முறையீட்டாளரை எந்தவிதத்திலும் தொடர்புப்படுத்தும் வகையிலான சான்று ஏதும் பதிவிலில்லை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். எ-1 அல்லது எ-3, இறந்த புருஷோத்தமனை கொலை செய்வதற்காக எ-2-ஐ நியமித்தனர் என்பதற்கான சான்று ஏதும் பதிவிலில்லை. மேலும், குற்றச் செயல் புரிவதற்கு பயன்படுத்திய ஆயுதமாகக் கூறப்படுகின்ற அரிவாளால் மரணமுற்றவரை எதிரி கொலை செய்தார் என்பதைச் சுட்டிக்காட்டும் சான்றுமில்லை. அறிவியல்பூர்வமாகவோ அல்லது வேறுவகையாகவோ எவ்வகையிலும் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றத்துடன் சேய்மையாகத் தொடர்புப்படுத்துகின்ற மறைமுகக் கூற்றோ அல்லது சான்றோ, பதிவில் இல்லை.
8. அ.சா.1-இன் சான்றுரையைப் ஆராய்கையில், அவர் முதலில் இந்த விடயம் குறித்து காவல் துறைக்கு தெரிவித்துள்ளார் என்பதையும், முதல் தகவல் அறிக்கையில் தாக்கியவர் பற்றிய விவரம் குறைந்தபட்சம் எ-2-இன் அடையாளம் குறித்துங்கூட எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் கண்டோம். எனினும், உயர் நீதிமன்றமானது, எ-3-இன் தகவல் வாக்குமூலத்தை நிராகரிக்கையில், எ-2-க்கு தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது, அது எங்களது கருத்துப்படி நீதியை நகைப்புக்குரியதாக்கிவிட்டது.
9. அனில் புகான் -எதிர்- அசாம் மாநில அரசு, (1993) 3 எஸ்.சி.சி. 282 என்ற வழக்கில் இந்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாவது: “3. …ஒரே கண்ணுற்ற சாட்சி முற்றிலும் நம்பத்தகுந்த சாட்சியாக உள்ளவரை, அவரது சாட்சியத்தின் அடிப்படையில் மட்டுமே தண்டனைத் தீர்ப்பு வழங்குவதில் நீதிமன்றங்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. எனினும், ஒரே கண்ணுற்ற சாட்சி முற்றிலும் நம்பத்தகுந்த சாட்சியாக இல்லாதவிடத்து, அதாவது, அவர் அரசுத்தரப்பு வழக்கில் ஆர்வங்காட்டுவதைத் தெரிவிக்கக்கூடிய சில சூழ்நிலைகள் இருக்கும்பட்சத்தில், தண்டனைத்தீர்ப்பைப் பதிவு செய்வதற்கு முன்பு, அவரது சான்றுரையின் முக்கியமான விவரங்களில் சிலவற்றைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவதையே நீதிமன்றங்கள் பொதுவாக வலியுறுத்துகின்றன. கண்ணுற்ற ஒரே சாட்சி முற்றிலும் நம்பத்தகாத சாட்சி என்று நீதிமன்றங்கள் அறிகிறபோதுதான், அவரது சான்றுரை முழுவதுமாக நிராகரிக்கப்படுகிறது, மேலும் எவ்வளவுதான் உறுதிப்படுத்தினாலும், அந்தக் குறைபாட்டினைச் சரிசெய்ய இயலாது.…” அ.சா.1-இன் சான்றுரையைப் பரிசீலிக்கையில், அவர் முக்கிய கூறுகளில் முரண்படுவதாகவும், அவரது கூற்று, விசாரணை அலுவலரின் (அ.சா.23) சான்றுரை மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளது எனவும் நாங்கள் காண்கிறோம். இது எதிரியை அடையாளம் காட்டுவது தொடர்பானதாகும். குற்றஞ்சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டும்பொருட்டு, சென்னை, புழல் சிறைக்கு வரும்படி அழைப்பாணை விடுத்ததைத் தொடர்ந்து, முந்தையவர், நீதிபதியின் முன்பு எதிரியை அடையாளம் காட்டியதாகத் தெரிவித்திருக்கும்போது, “…இரண்டாம் எதிரியான உதயகுமார், புருஷோத்தமனை கொலை செய்ததாக தங்களுக்கு தெரியவந்தது என அ.சா.[1] வாக்குமூலம் அளித்தது சரியே” என்றும், “எதிரியை காவல் நிலையத்தில் அடையாளம் காட்டிய பின்னரே, அவர்கள் எதிரியை அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டினர் என்று சொல்வதும் சரியே” என்றும் பிந்தையவர் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கிறார். ”எதிரியின் அடையாளம் காவல்துறைக்கும், சாட்சிகளுக்கும் ஏற்கெனவே தெரிந்திருந்தால், அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கான கேள்வி எங்கிருந்து எழும்? என்று நாங்கள் வியக்கின்றோம். எதிரியை சாட்சிகள் முன்பே அறியவில்லை என்றால் மட்டுமே விசாரணை அணிவகுப்பு நடத்துவதற்கான அவசியம் முழுமையாக எழும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். சம்பவம் நடந்த சமயத்தில் குற்றவாளிகளைப் பார்த்ததாகக் கூறும் சாட்சிகள், எவ்வித உதவியுமின்றி அல்லது வேறு எந்த ஆதாரமுமின்றி, மற்ற நபர்களுக்கிடையே அவர்களை அடையாளம் காட்டுவதே அடையாள அணிவகுப்பு சோதனையின் முழு நோக்கமாகும். [ஹீரா -எதிர்- இராஜஸ்தான் மாநில அரசு (2007) 10 எஸ்.சி. 175]. எதிரியை, சாட்சிகள் ஏற்கெனவே அறிந்திருந்தால், விசாரணை அணிவகுப்பு எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை என்பதையும் நாங்கள் குறிப்பிடுகிறோம். [ஷேக் சிந்தா மதர் -எதிர்- மாநில அரசு, (2016) 11 எஸ்.சி.சி. 265]. இந்த நீதிமன்றம், மகாராஷ்டிர மாநில அரசு -எதிர்- சுரேஷ், (2000) 1 எஸ்.சி.சி. 471 என்ற வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்துவதன் நோக்கத்தை விரிவாகக் கூறியுள்ளதாவது: “22. …அடையாள அணிவகுப்புகள் என்பன முதன்மையாக நீதிமன்றத்திற்கானவையல்ல என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம். அவை புலனாய்வு நோக்கங்களுக்கானவை. அடையாள அணிவகுப்பு சோதனை நடத்துவதற்கான நோக்கம் இரண்டு வகைப்படும். முதலாவது, தாங்கள் சந்தேகிக்கும் கைதி, உண்மையில் குற்றச் செயல் புரிந்ததைக் தாங்கள் கண்டவரே எனச் சாட்சிகளை திருப்தியுறச் செய்வதேயாகும். இரண்டாவது, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்தான் சாட்சிகள் கண்ட உண்மையான நபர் என விசாரணை அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதாகும். எனவே, அடையாள அணிவகுப்பு சோதனையை நடத்தும் அலுவலர், அணிவகுப்பின் மேற்படி நோக்கம் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்யவேண்டும். ஒரு அணிவகுப்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை அவர் தளர்த்துவதற்கு அனுமதிப்பாரானால், அத்தகைய தளர்வு, அணிவகுப்பை நடத்தும் நோக்கத்தைப் பாதிக்கிறதா என்பதை அவர் பார்க்கவேண்டும் [காண்க: புத்சென் -எதிர்- உ.பி. மாநில அரசு, (1970) 2 எஸ். சி. சி. 128; ராமநாதன் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு (1978) 3 எஸ். சி. சி. 86]. ” மேலும், கிரிசன் நாயர் மற்றும் பலர் -எதிர்- கேரள மாநில அரசு, (2023) 1 எஸ். சி. சி. 180 என்ற வழக்கில் நீதிமன்றம் கருத்துரைத்ததாவது: “ 44.…எதிரி, சாட்சிக்கு காட்டப்பட்டாலோ அல்லது அடையாள அணிவகுப்பு சோதனைக்கு முன்பு விசாரணை அலுவலரால் அவரது புகைப்படம் காட்டப்பட்டாலோ, அத்தகைய சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளில் அடையாள அணிவகுப்பு நடத்துவது பொருத்தமற்றது என்று இந்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்மானித்துள்ளது.
45. இந்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான தீர்முடிவான ஷேக் உமர் அகமது ஷாயிக் -எதிர்- மகாராஷ்டிர மாநில அரசு, (1998) 5 எஸ். சி. சி. 103 என்ற வழக்கில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாவது: 8............ ஆனால், அடையாள அணிவகுப்புக்கு முன்னர், காவல் நிலையத்தில் சாட்சிகளுக்கு எதிரியைக் காண்பிக்கும் சாத்தியக்கூறு இருந்துவிட்டால், நீதிமன்றத்தில், எதிரியின் அடையாளம் குறித்து சாட்சிகளால் அளிக்கப்படும் சாட்சியத்திற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட முடியும்? என்னும் வினா எழுகின்றது. சந்தேகத்திற்குரிய நபர்கள், சாட்சிகளுக்கு காட்டப்பட்டுவிட்டனர் என்பதற்கான வலுவான சாத்தியக்கூறு இருந்தது என்ற காண்முடிவை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே பதிவு செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், எதிரிகள், ஏற்கெனவே சாட்சிகளுக்கு காட்டப்பட்டுவிட்டதால், நீதிமன்றத்தில், அவர்களை சாட்சிகள் அடையாளங்காட்டுவது என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். நீதிமன்றத்தில் எதிரிகளை அடையாளம் காட்டும் சாட்சிகளின் வாக்குமூலம் அதன் முக்கியத்துவத்தை முற்றிலுமாக இழந்துவிடுவதோடு, அதனை குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது தண்டனைத் தீர்ப்பைப் பதிவு செய்வதற்கான அடிப்படையாகக் கருதமுடியாது..........”
10. சதித்திட்டம் என்ற கோட்பாடு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், மிகக்குறிப்பாக அரசுத்தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள அதே சான்றுத்தொகுப்பின் அடிப்படையில், குற்றத்தில் ஈடுபட்ட முதன்மை சதியாளர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும்போது, எ-2-இன் தண்டனைத் தீர்ப்பை உறுதிப்படுத்துவதற்கான எந்தக் காரணமும் அல்லது அடிப்படையும் இல்லை என்பதே எங்களது ஆய்ந்தறிந்த கருத்தாகும்.
11. துரதிருஷ்டவசமாக, எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புரையில், ஆவணச் சான்றுக்கான எந்தக் காரணவிளக்கமும் அல்லது எந்த மதிப்பீடும் இல்லை. சாத்தியக் கூறுகள் மிகுந்திருத்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் எதிரியை தண்டிக்க முடியாது. எவ்வாறாயினும் நீதி வழுவல் தடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்வது எங்களது கடமையாகும், மேலும் சந்தேகத்தின் பலன் ஏதுமிருப்பின் அது எதிரிக்கு அளிக்கப்படவேண்டும். [சுஜித் பிஸ்வாஸ் -எதிர்- அசாம் மாநில அரசு, (2013) 12 எஸ். சி. சி. 406, ஹனுமந்த் கோவிந்த் நர்குந்த்கர் -எதிர்- ம.பி. மாநில அரசு (ஏ.ஐ.ஆர். 1952 எஸ்.சி. 343) மற்றும் மாநில அரசு -எதிர்- மகேந்திர சிங் தஹியா, (2011) 3 எஸ்.சி.சி. 109].
12. உயர் நீதிமன்றமானது, 21 பக்கங்கள் கொண்ட எதிர்ப்புக்குள்ளான தீர்ப்புரையில், சதித்திட்டம் என்ற கோட்பாட்டையும், எ-1 மற்றும் எ-3-இன் குற்றத்தையும் விரிவாக விவாதித்துள்ளது, கடைசிக்கு முந்தைய பகுதியில்தான் அதாவது 26 மற்றும் 27-ஆம் பத்திகளில் மட்டும்தான் எ-3-இன் குற்றம் குறித்து அக்கறையின்றி விவாதித்துள்ளது என்றும் நாங்கள் பதிவு செய்கிறோம்.
13. எங்களது ஆய்ந்தறிந்த கருத்தின்படி, அரசுத்தரப்பு, எதிரியின் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க குறைந்தபட்சம் தேவைப்படுவதையாவது நிரூபிக்கத் தவறிவிட்டது.
14. எங்கள் முன்பான இந்த வழக்கில், சங்கிலித் தொடர் போன்று சான்றுகள் முழுமையாக நிரூபிக்கப்படவுமில்லை, மேல்முறையீட்டாளரால் புரியப்பட்ட குற்றச் செயல் குறித்து அறுதியாகச் சுட்டிக்காட்டக்கூடிய சூழ்நிலைகளுமில்லை என்று நாங்கள் அறிகிறோம். அரசுத்தரப்பானது, சந்தேகத்திற்கிடமின்றி அதன் வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டது. சரத் பிர்திசந்த் சார்தா -எதிர்- மகாராஷ்ர மாநில அரசு, (1984) 4 எஸ். சி. சி. 116 என்ற முக்கியமான வழக்கில், சூழ்நிலை சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நேர்வில், எதிரி தண்டிக்கப்படுவதற்கு முன்பு, நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான நிபந்தனைகள் குறித்து இந்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
15. இந்நீதிமன்றத்தால் தீர்ப்புப் பகரப்படும்போது பின்பற்றப்படும் வழக்கமான முறைப்படி, கீழமை நீதிமன்றங்களால் ஒத்திசைவான சங்கதி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும்போது, விதிவிலக்கான நேர்வுகளில் அல்லது மிகமுக்கியமான சூழ்நிலைகளையும், குற்ற சட்டவியலின் நன்கு அறுதியிடப்பட்டுள்ள கோட்பாடுகளையும் புறக்கணித்து பெரும் பிழை புரியப்படும் நேர்வுகளில் மட்டுமே இந்நீதிமன்றம் தலையீடு செய்கிறது. [ராமபூபாலா ரெட்டி -எதிர்- ஆந்திரப் பிரதேச மாநில அரசு, (1970) 3 எஸ்.சி.சி. 474, பாலக் ராம் -எதிர்- உ.பி. மாநில அரசு, (1975) 3 எஸ்.சி.சி. 219, போகின்பாய் ஹிர்ஜிபாய் -எதிர்- குஜராத் மாநில அரசு, (1983) 3 எஸ்.சி.சி. 217]. எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளில், அத்தகைய காண்முடிவுகளைச் சரிசெய்வது நமது கடமையாகிறது.
16. முடிவாக, தற்போது எங்கள் முன்புள்ள மேல்முறையீட்டாளரான உதய குமார் (எ-2)-க்கு, அமர்வு வழக்கு எண் 113/2009-இல் அறிவார்ந்த விசாரணை நீதிமன்றத்தால் 04.12.2009 தேதியிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டதும், குற்றவியல் மேல்முறையீடு எண்கள் 17, 22 மற்றும் 24/2010- இல், உதயகுமார் மற்றும் பலர் -எதிர்- தமிழ்நாடு மாநில அரசு என்ற வழக்கில், 15.03.2010-ஆம் தேதியிடப்பட்ட உயர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டதுமான குற்ற மற்றும் தண்டனைத் தீர்ப்புகள் இரத்து செய்யப்பட்டு, நீக்கறவு செய்யப்படுகின்றன என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
17. மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது.
18. மேல்முறையீட்டாளர் ஏற்கெனவே பிணையில் இருப்பதால், அவரது பிணைமுறி இரத்துச் செய்யப்படுகிறது......மாண்புமிகு நீதியரசர் திரு. பி. ஆர். கவாய்....மாண்புமிகு நீதியரசர் திரு. சஞ்சய் கரோல் நாள்: 16.03.2023 இடம்: புதுதில்லி