Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேல்முறையீட்டு அதிகாரவரம்பு
குற்றவியல் மேல்முறையீடு எண் 1592/2022
சௌந்தரராஜன் ... மேல்முறையீட்டாளர்
-எதிர்-
மாநில அரசின் சார்பாக
காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புத்துறை, திண்டுக்கல். ... எதிர்மேல்முறையீட்டாளர்
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு. அபய் எஸ். ஓகா:
சங்கதிகள்
JUDGMENT
1. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (சுருக்கமாக ‘ஊ.த. சட்டம்’) பிரிவு 13(1)(டி) உடனிணைந்த பிரிவு 7 மற்றும் பிரிவு 13(2)-இன் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றங்களுக்காக மேல்முறையீட்டாளருக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேல்முறையீட்டாளர் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும், ரூ.2,000/- அபராதம் செலுத்தும்படியும் தண்டனை வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றமானது இந்தக் கேள்விக்குள்ளான தீர்ப்புரையின் மூலம் மேல்முறையீட்டாளருக்கான குற்ற மற்றும் தண்டனைத் தீர்ப்பை உறுதிசெய்தது.
2. தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், கண்ணிவாடியில் சார்-பதிவாளர் பதவியை மேல்முறையீட்டாளர் வகித்துவந்தார். புகார்தாரரான எம். சுந்தரமூர்த்தி (அ.சா.2) 16.05 சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்தை விலைக்கு வாங்கினார். அதற்கிணங்க, 2004-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 12-ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சார்-பதிவாளராக இருந்துவந்த மேல்முறையீட்டாளர் முன்பு கிரைய ஆவணம் முன்னிடப்பட்டது. புகார்தாரர் மற்றும் அவரது விற்பனையாளர்கள் முன்னிலையாகி இருந்தனர். புகார்தாரர் தன்னுடைய புகார் மனுவில் கொடுத்துள்ள வழக்கின்படி, ரூ.880/- மதிப்புள்ள முத்திரைத்தாளின் மீது கிரைய ஆவணம் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது நீங்கலாக, கிரைய ஆவணத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணங்களுக்கு வேண்டி ரூ.190/- தொகையை அவர் செலுத்தியுள்ளார். மேற்சொன்ன தொகைக்கான இரசீதும் மேல்முறையீட்டாளரால் வழங்கப்பட்டது. புகார்தாரர் 2004-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 16-ஆம் தேதியன்று மேல்முறையீட்டாளரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திலிருந்து நில அளவீட்டு புத்தக வரைபடத்தைக் கொண்டுவரும்படி அறிவுறுத்தப்பட்டது. புகார்தாரரின் கூற்றுப்படி, 2004-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 31-ஆம் தேதியன்று மேற்சொன்ன வரைபடம் அவரால் தாக்கல் செய்யப்பட்டது. வரைபடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இடத்தைப் பார்வையிடுவதற்கு வருகை புரியவிருப்பதாக மேல்முறையீட்டாளர் அவரிடம் தகவல் அளித்தார். அதன்படி, இடத்தைப் பார்வையிடுவதற்கு மேல்முறையீட்டாளரை இயல்விக்கும் வகையில் புகார்தாரர் அவருக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்தார். நிலத்தில் உள்ள மரங்களைக் கவனித்தப் பின்னர், கிரையத்தின் முக்கிய விடயமாக உள்ள நிலமானது பயிர் செய்வதற்கு ஏற்றது என்பதைக் காண்பிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து இட அமைப்பு வரைபடங்களைப் பெற்றுத்தரும்படி மேல்முறையீட்டாளர் புகார்தாரரிடம் அறிவுறுத்தினார். அதன்பின்னர், தேவையான ஆவணங்களை புகார்தாரர் பெற்று, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6-ஆம் தேதியன்று காலை 11.30 மணியளவில் அதனை மேல்முறையீட்டாளரிடம் ஒப்படைத்தார், அந்தச் சமயத்தில், பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவணத்தை ஒப்படைப்பதற்காக ரூ.500/-ஐ மேல்முறையீட்டாளர் கையூட்டாகக் கோரியுள்ளார். புகார்தாரருக்கு கையூட்டு கொடுக்க விருப்பம் இல்லாததால், 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 11-ஆம் தேதியன்று ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளரிடம் அவர் ஒரு புகார் அளித்தார்.
3. புகாரின் அடிப்படையில், 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 12-ஆம் தேதியன்று சிக்க வைப்பதற்கு ஒரு பொறி வைக்கப்பட்டது; அது வெற்றி பெறவில்லை. அரசுத்தரப்பு வழக்கின்படி, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் தேதியன்று மீண்டும் சிக்க வைப்பதற்கான ஒரு பொறி வைக்கப்பட்டது. அது வெற்றியடைந்து, நிழல் சாட்சியான மைக்கேல் (அ.சா.3)-இன் முன்னிலையில் கையூட்டைப் பெற்றுக்கொள்கையில் மேல்முறையீட்டாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
4. அரசுத்தரப்பில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஒப்பளிப்பு உத்தரவை மெய்ப்பிப்பதற்கான அ.சா.1-ஆன என். தனம் ஜெயன் விசாரிக்கப்பட்டார். முன்னதாக கூறப்பட்டதுபோன்று, அ.சா.2-எம். சுந்தரமூர்த்தி புகார்தாரரும் மற்றும் அ.சா.3-மைக்கேல் நிழல் சாட்சியும் ஆவர். மேல்முறையீட்டாளரால் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் சாட்டுரையை மெய்ப்பிப்பதற்கு மேற்சொன்ன சாட்சிகள் தவிர வேறொருவரும் இல்லை. புகார்தாரர் (அ.சா.2) அரசுத்தரப்பினரை ஆதரிக்கவில்லை என்பதால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். மேல்முறையீட்டாளர் பணிபுரிந்து வந்த அலுவலகத்துடைய தணிக்கை அறிக்கை மற்றும் மதிப்பீட்டைக் கணக்கிடுவதற்காக கிரைய ஆவணத்தின் முக்கியமான விடயமாக உள்ள நிலத்தைப் பார்வையிடுவதற்கு சார்-பதிவாளரை வேண்டுறுத்துகின்ற பதிவுத்துறை தலைவரால் வழங்கப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கு கலைசெல்வி மற்றும் எஸ். கதிரேசன் ஆகிய இரண்டு பேரை மேல்முறையீட்டாளர் எதிர்த்தரப்பு சாட்சிகளாக விசாரித்தார். வாதங்கள்
5. 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6 மற்றும் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் தேதிகளன்று கையூட்டு கோரியது தொடர்பாக எந்தக் குற்றச்சாட்டும் வனையவில்லை என்று மேல்முறையீட்டாளருக்காக முன்னிலையான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் திரு. எஸ். நாகமுத்து வாதிட்டார். சிறப்பு நீதிமன்றத்தால் வனையப்பட்ட முதல் குற்றச்சாட்டு குறித்து அவர் எங்களது கவனத்தை ஈர்த்தார், 2004-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 12-ஆம் தேதியன்று கிரைய ஆவணம் பதிவு செய்யப்பட்டபோது, கையூட்டு கேட்டதாகத்தான் குற்றச்சாட்டு என்று அவர் வலியுறுத்தினார். அரசுத்தரப்பு வழக்கின்படியுங்கூட, கிரைய ஆவணம் பதிவு செய்யப்படும் சமயத்தில் 2004-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 12-ஆம் தேதியன்று எந்தக் கையூட்டு கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அவர் பணிந்துரைத்தார். குற்றச்சாட்டில் உள்ள இந்த முக்கிய குறைபாட்டினாலும், 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6-ஆம் தேதியன்றும் மற்றும் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் தேதியன்றும் கையூட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக ஒரு முறையான குற்றச்சாட்டை வனையத் தவறியதன் காரணமாகவும், தம்மைத்தாமே சரியாகப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் மேல்முறையீட்டாளருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது என்று அவர் வாதிட்டார்.
6. எந்தவொரு சமயத்திலும் அரசுத்தரப்பினரை புகார்தாரர் ஆதரிக்கவில்லை என்றும், புகார்தாரரிடம் கிரைய ஆவணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக தனது முன்னிலையில் மேல்முறையீட்டாளரால் ரூ.500/- தொகைக்கான கையூட்டு கேட்கப்பட்டது என்று நிழல் சாட்சியான (அ.சா.3) சாட்சியம் அளிக்கவில்லை என்றும் மேல்முறையீட்டாளருக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் வாதுரைத்தார். கையூட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரமில்லாமல் பிரிவு 7-இன் கீழாக தண்டிக்கக்கூடிய குற்றங்கள் மெய்ப்பிக்கப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். பிரிவு 7-இன் கீழாக எந்தக் குற்றமும் மெய்ப்பிக்கப்படவில்லை என்பதால், பிரிவு 13 உட்பிரிவு (1) விலக்குக்கூறு (டி)-இன் கீழான குற்றமுங்கூட நிலைநாட்டப்படவில்லை.
7. மாநில அரசு சார்பாக முன்னிலையான கற்றறிந்த வழக்குரைஞர் முனைவர் ஜோசப் அரிஸ்டாட்டில் அவர்கள் பணிந்துரைத்ததாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (சுருக்கமாக ‘கு.ந.ச.’) பிரிவு 464-ஐ முன்னிட்டு, மேற்கண்ட விடுபடல் அல்லது நீதித் தவறுகையால் பாதிப்பு ஏற்பட்டது என்று குற்றவாளியால் நிரூபிக்கப்பட்டாலன்றி, குற்றச்சாட்டு வனைவதிலுள்ள விடுபாடு அல்லது குறைபாடு எதுவும் அரசுத்தரப்பு வழக்கினைப் பாதிக்காது என்பதாகும். இவ்வழக்கில், பாதகம் எதுவும் காண்பிக்கப்படவில்லை என்றும் அவர் சமர்ப்பித்தார்.
8. மோகன் சிங் -எதிர்- பீகார் மாநில அரசு1 மற்றும் இந்திய ஒன்றியம் -எதிர்- முன்னாள் ஜி.என்.ஆர். அஜீத் சிங்2 போன்ற வழக்குகளில் உள்ள இந்த நீதிமன்றத்தின் தீர்முடிவுகள் மீது அவர் சார்வுற்றார். சந்தர்ப்ப சாட்சியத்தின் அடிப்படையிலுங்கூட கையூட்டு பெறுவதற்கான கோரிக்கையை நிலைநாட்டலாம் என்பதற்காக, நீரஜ் தத்தா -எதிர்- மாநில அரசு (தில்லி அரசின் தேசிய தலைநகர ஆட்சிப்பகுதி)3 என்ற வழக்கில் அரசமைப்பு அமர்வின் தீர்முடிவு மீது கற்றறிந்த வழக்குரைஞர் இறுதியாகச் சார்வுற்றார். 1 (2011) 9 எஸ்.சி.சி. 272 2 (2013) 4 எஸ்.சி.சி. 186 3 2022 எஸ்.சி.சி. ஆன்லைன் எஸ்.சி. 1724 கையூட்டு கேட்டதற்கான ஆதாரத்தின் மீதான காண்முடிவு
9. நாங்கள் விவாதங்களைப் பரிசீலித்தோம். ஊ.த. சட்டத்தின் பிரிவு 7-இன் கீழாக தண்டிக்கக்கூடிய குற்ற நிகழ்வை நிலைநாட்டுவதற்கு கையூட்டு கோரியதற்கான ஆதாரம் மற்றும் கையூட்டு பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை மெய்ப்பிப்பது இன்றியமையாத தகுதிக்கூறாகும். மேலும், பிரச்சினையில் உள்ள சங்கதிகளை குறிப்பாக, கையூட்டு பெறுவதற்கான குற்றவாளியின் கோரிக்கை மற்றும் அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை மெய்ப்பித்தால் மட்டுமே ஊ.த. சட்டத்தின் பிரிவு 20-இன் கீழான அனுமானத்தின் துணைகொள்ளலாம் என்று நீரஜ் தத்தா3 என்ற வழக்கில் அரசமைப்பு அமர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
10. முன்னதாகக் கூறியதுபோன்று, புகார்தாரரான அ.சா.[2] அரசுத்தரப்பு வழக்கினை ஆதரிக்கவில்லை. மேல்முறையீட்டாளரால் கையூட்டு கோரப்பட்டதைப்பற்றி தனது முதல் விசாரணையில் அவர் எதுவும் கூறவில்லை. அரசுத்தரப்பு வழக்குரைஞர் அ.சா.2-ஐ குறுக்கு விசாரணை செய்தார். மேல்முறையீட்டாளரால் கையூட்டு கேட்கப்படவில்லை என்று சாட்சி கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, கிரைய ஆவணத்தைத் திருப்பிக்கொடுக்க தாமதமானதால் அவர் புகார் அளித்தார் என்பதாகும். புகாரினை அவர்தான் அளித்தார் என்று அ.சா.[2] ஒப்புக்கொண்டிருந்தாலும், எவ்வாறு கையூட்டு கோரிக்கை வைக்கப்பட்டது என்று புகாரில் அவர் விவரித்திருந்த முக்கியமான பகுதிகளைக் குறித்து குறுக்கு விசாரணையில் அவரை எதிர்த்து எந்தக் கேள்வி கேட்கப்படவில்லை. அரசுத்தரப்பு வழக்குரைஞர், சாட்சியிடம் அவரது புகாரில் முன்னதாகக் கூறப்பட்டிருக்கும் கூற்றுகள் குறித்து எதிர்த்து கேள்விகேட்டு, புகாரினை எழுதிய சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர் மூலம் புகாரின் அந்த முக்கியமான பகுதிகளை மெய்ப்பித்திருக்கவேண்டும். எனினும், அது செய்யப்படவில்லை.
11. இப்போது, நிழல் சாட்சியான (அ.சா.3)-இன் சாட்சியத்திற்கு நாம் திரும்புவோம். முதல் விசாரணையில், அ.சா.2-யிடம் மேல்முறையீட்டாளர் தொகையைக் கொண்டுவந்தாரா? என்று வினவியதாக அவர் கூறியுள்ளார். தனது முன்னிலையில் அ.சா.2-யிடம் குறிப்பாக கையூட்டு பெற மேல்முறையீட்டாளர் கோரிக்கை வைத்ததாக அ.சா.[3] கூறவில்லை. ஊ.த. சட்டம், பிரிவு 7-ஐ ஈர்ப்பதற்கு கையூட்டு பெறுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கவேண்டும். பிரிவு 7-இல் பயன்படுத்தப்படும் சொல்லானது, 2018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 26-க்கு முன்பாக நடைமுறையில் இருந்ததுபோன்று, “கையூட்டு” என்பதாகும். கையூட்டு பெறுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டிருக்கவேண்டும். அது பணத்திற்கான சாதாரண கோரிக்கையல்ல. மாறாக அது, கையூட்டு பெறுவதற்கான கோரிக்கையாக இருக்கவேண்டும். கையூட்டு பெறுவதற்காக வைக்கப்பட்ட கோரிக்கையும் மற்றும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற சங்கதியும் மெய்ப்பிக்கப்படும்பட்சத்தில், பிரிவு 20-இன் கீழான அனுமானத்தை துணைகொள்ளலாம், மேலும் அந்தக் கோரிக்கையானது ஏதேனும் அலுவலக செயலைச் செய்வதற்கான ஓர் உட்கருத்து அல்லது வெகுமதியாக இருக்கவேண்டும் என்று நீதிமன்றம் அனுமானிக்கலாம். எதிரியால் இந்த அனுமானம் மறுக்கப்படலாம்.
12. இவ்வழக்கில் கையூட்டு கோரியமைக்கான சூழ்நிலைச் சாட்சியம் இல்லை. இந்தச் சூழமைவில், பிரிவு 7 மற்றும் பிரிவு 13(2) உடனிணைந்த பிரிவு 13(1)(டி)-இன் கீழாக தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் நிலைநாட்டப்படவில்லை. கையூட்டு கோருதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் இவ்விரண்டும் நிரூபிக்கப்பட்டாலன்றி, பிரிவு 13(1)(டி)-இன் விலக்குக்கூறுகள் (i) மற்றும் (ii)-இல் உள்ளடங்கிய ஊழல் முறைகளினால் பணவகையிலான ஆதாயத்தைப் பெறுகின்ற குற்றத்தை மெய்ப்பிக்கமுடியாது. முறையான குற்றச்சாட்டை வனையத் தவறியதற்கான விளைவு
13. மேல்முறையீட்டாளருக்காக முன்னிலையான கற்றறிந்த மூத்த வழக்குரைஞரால் செய்யப்பட்ட மற்றொரு வாதத்தை நாம் கையாள்வது அவசியமாகும். இது பிரிவு 7-இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்கு முறையான குற்றச்சாட்டை வனையத்தவறியது பற்றியதாகும். குற்றச்சாட்டின் தொடர்புடைய பகுதி எடுத்தியம்புவதாவது: “திண்டுக்கல் மாவட்டம், கண்ணிவாடியில் 27.10.2003 முதல் 27.10.2003 வரையில் சார்-பதிவாளராக பணிபுரிந்துவரும் நீர் அரசு ஊழியர் என்ற முறையில் சுந்தரமூர்த்தி என்பவரால் 12.7.2004 அன்று விலைக்கு வாங்கப்பட்ட 16.05 சென்ட் கொண்ட நிலத்தின் கிரைய ஆவணத்தைப் பதிவு செய்து சட்டப்படியான ஊதியம் பெற்றதோடு அல்லாமல் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைத் திருப்பித் தருவதற்கு கையூட்டாக ரூ.500/-க்கான கோரிக்கை வைத்ததோடு, ரூ.500/- கையூட்டாகவும் பெற்றுக்கொண்டீர், எனவே இந்நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக்கூடியதும், ஊழல் தடுப்புச் சட்டம், 1988, பிரிவு 7-இன் கீழ் தண்டிக்கப்படக்கூடியதுமான குற்றங்களுக்கு நீர் பங்களித்துள்ளீர்.”
14. எனவே, மேல்முறையீட்டாளரால் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6 மற்றும் 13-ஆம் தேதிகளன்று கையூட்டு கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கும் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் தேதியன்று அதனை ஏற்றுக்கொண்டதற்குமான குறிப்பிட்ட குற்றச்சாட்டினை வனைவதற்கு சிறப்பு நீதிமன்றம் தவறியுள்ளது.
15. கு.ந.ச., பிரிவு 464-இன் கீழ், நீதிமன்றத்தின் கருத்துரைப்படி, உண்மையிலேயே நீதித் தவறுகை நிகழ்ந்திருந்தாலன்றி, ஒரு குற்றச்சாட்டு வனைவதில் விடுபடுதல் அல்லது குற்றச்சாட்டில் உள்ள எந்தவித பிழையும் பாதிப்பேற்படுத்தாது. இவ்வழக்கில், அ.சா.[3] மற்றும் பிற அரசுத்தரப்பு சாட்சிகளை மேல்முறையீட்டாளருக்கான வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்ததைப் பார்வையிட்டதிலிருந்து, முதலில் 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 6-ஆம் தேதியன்று கையூட்டு கோரிக்கை வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது, அதனைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் தேதியன்று கையூட்டு கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்பட்டதைக் குறித்த அரசுத்தரப்பு வழக்கினை மேல்முறையீட்டாளர் தெளிவாகப் புரிந்துகொண்டார் என்பது தெரிகிறது. இது முறையான குற்றச்சாட்டினை வனையத் தவறிய வழக்கு என்பதில் சந்தேகமில்லை, வனையப்பட்ட குற்றச்சாட்டு எதுவாகயிருப்பினும், அது குறையுள்ளது மட்டுமேயாகும். எனினும், மேற்சொன்ன விடுபடல் அல்லது குறைபாட்டின் காரணமாக தன்னுடைய உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதைப் பொறுத்தவரையில் எதிரிக்கு பாதிப்பில்லை. எனவே, இவ்வழக்கில் குற்றச்சாட்டு வனையத் தவறியது மற்றும்/அல்லது குற்றச்சாட்டில் உள்ள பிழை கேடார்ந்தது அல்ல.
16. இவ்வழக்கில் குற்றச்சாட்டானது மிகவும் தற்செயலாக வனையப்பட்டுள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். குற்றச்சாட்டு வனைதல் என்று வரும்போது விசாரணை நீதிமன்றங்கள் மிகவும் உன்னிப்பாக இருக்கவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள வழக்கில், அத்தகைய பிழை அல்லது விடுபடல் ஏதேனுமிருப்பின், விடுதலைக்கு வழிவகுக்கும் மற்றும்/அல்லது கு.ந.ச., பிரிவு 464 உட்பிரிவு (2)-இன் கீழ் பிறப்பிக்கப்படக்கூடிய மறுவிசாரணை உத்தரவின் காரணமாக விசாரணையானது மிகவும் தாமதிக்கலாம். இது விசாரணை நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல, அரசுத்தரப்பு வழக்குரைஞரும் விழிப்புடன் இருப்பது கடமையாகும், முறையான குற்றச்சாட்டு வனையப்படவில்லையெனில், உரிய குற்றச்சாட்டினை வனைவதற்குவேண்டி நீதிமன்றத்திடம் முறையிடுவது அவரது கடமையாகும்.
17. இம்மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. கேள்விக்குள்ளான தீர்ப்புரைகள் செல்லாதவையாக்கப்பட்டு நீக்கறவு செய்யப்படுகின்றன. மேல்முறையீட்டாளர், அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். மேல்முறையீட்டாளருடைய பிணைப் பத்திரங்கள் இரத்து செய்யப்படுகின்றன................ மாண்புமிகு நீதியரசர் திரு. அபய் எஸ். ஓகா............... மாண்புமிகு நீதியரசர் திரு. இராஜேஷ் பின்டால் புது தில்லி, 17.04.2023 பொறுப்புத்துறப்பு “வட்டார மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்தீர்ப்புரையானது, வழக்காடி, தன்னுடைய மொழியில் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்வதற்கும் உட்பட்டதேயன்றி, வேறெந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாகாது. அனைத்து நடைமுறையான மற்றும் அலுவல்முறையான நோக்கங்களுக்கும் மற்றும் தீர்ப்புரையை நிறைவேற்றலுக்கும், செயற்படுத்தலுக்கும் அதன் ஆங்கிலப் பதிப்பே அதிகாரப்பூர்வமானதாகும்.”