Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
குற்றவியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பு
குற்றவியல் மேல்முறையீடு எண் 1389/2023
(சிறப்பு அனுமதி மனு (குற்றவியல்) எண் 369/2023-இல்)
நாகரத்தினம் ... மேல்முறையீட்டாளர்
-எதிர்-
மாநில அரசு காவல் ஆய்வாளர் மூலமாக ... எதிர்மேல்முறையீட்டாளர்
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு. அஹ்சானுதீன் அமானுல்லா
அனுமதி வழங்கப்பட்டது.
JUDGMENT
2. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு (இனிமேல் "உயர் நீதிமன்றம்" என்று குறிப்பிடப்படும்), 05.08.2019-ஆம் தேதி குற்றவியல் மேல்முறையீடு (எம்.டி.) எண் 186/2019-ஐ பகுதியாக அனுமதித்து வழங்கிய இறுதி தீர்ப்பு மற்றும் உத்தரவுக்கு (இனிமேல் "கேள்விக்குள்ளான தீர்ப்பு" என்று குறிப்பிடப்படும்) எதிராக இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குச் சங்கதியின் கூறுகள்:
3. மேல்முறையீட்டாளர் சுரேஷ் என்பருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த நபர் மேல்முறையீட்டாளரை அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது மேல்முறையீட்டாளரை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கத் தூண்டியது. அவரது முடிவின்படி அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, அவர் தாவரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தினை வாங்கி, தனது இரட்டைக் குழந்தைகளான இராமர் மற்றும் இலட்சுமணனுக்கு கொடுத்துள்ளார். அதன்பிறகு, மனுதாரர் பூச்சிக்கொல்லி மருந்தை தான் உட்கொள்ள ஒரு டம்ளரில் ஊற்றியபோது, அவரது உறவினர் அதை கீழே தள்ளி விட்டார். இருப்பினும், துரதிருஷ்டவசமாக, இரண்டு குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால், இந்திய தண்டனைச் சட்டம், 1860-இன் (இனி "இ.த.ச" எனக் குறிப்பிடப்படும்) பிரிவு 302-இன் கீழ் செம்பட்டி காவல் நிலையத்தில் 28.03.2003-ஆம் தேதியிட்ட மு.த.அ. எண் 115/2003 பதிவு செய்யப்பட்டது.
4. விசாரணையில், திண்டுக்கல் கற்றறிந்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (விரைவு நீதிமன்றம்), அமர்வு வழக்கு எண் 92/2004-இல் 10.01.2005-ஆம் தேதி வழங்கிய தீர்ப்புரை மற்றும் உத்தரவில் மேல்முறையீட்டாளரை இ.த.ச., 302 மற்றும் 309-ஆம் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ரூ.5,000/- என மொத்தம் ரூ.10,000/- அபராதமும், தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.1,000/- அபராதமும் விதித்தது, தவறினால், அவர், இ.த.ச., பிரிவு 309-இன் கீழ் மேலும் மூன்று மாதங்களுக்கு சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
5. மேல்முறையீட்டில், உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டை பகுதியாக அனுமதித்து, மேல்முறையீட்டாளரை இ.த.ச., பிரிவு 309-இன்படி விடுதலை செய்து, இ.த.ச., பிரிவு 302-இன்படியான தண்டனையை உறுதி செய்தது.
6. மேல்முறையீட்டாளர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தார். ஆனால், மாநில அளவிலான குழுவின் பரிந்துரையை தமிழக அரசு, மேல்முறையீட்டாளரின் கொடுமையான மற்றும் மிருகத்தனமான குற்றத்தின்(ங்களின்) தன்மையைக் கருத்தில் கொண்டு 24.09.2019-ஆம் நாளிடப்பட்ட அரசாணை (டி) எண் 1127-இன் மூலம் நிராகரித்தது. மேல்முறையீட்டாளரின் பணிந்துரைகள்:
7. மேல்முறையீட்டாளர் தனது குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று கருதப்பட்டாலும் கூட, அது திடீரென்று தூண்டப்பட்டதால் செய்த நடவடிக்கை என்பதால் அது இ.த.ச., பிரிவு 300 விதிவிலக்கு 1-இன் கீழ் வரும் என்று மேல்முறையீட்டாளருக்கான கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் சமர்ப்பித்தார். மேலும், மேல்முறையீட்டாளர் ஒரு தாயான நிலையில் தன் இரண்டு மகன்களுடன் குடும்பமாகத் தற்கொலை செய்து கொள்ளும் மிகக் கஷ்டமான ஒரு முடிவை எடுத்து செயல்பட்டதால், இது இ.த.ச., பிரிவு 300 விதிவிலக்கு 1-இன் கீழ் அடங்கும் குற்றத்தின் கடுமையைக் குறைத்துக்காட்டும் சூழ்நிலையாகும் என்றும், மேலும் தாய் பிழைத்துக் கொண்டு/உயிருடன் இருந்து, குழந்தைகள் இறந்துவிட்டதால் இது இ.த.ச., பிரிவு 304 பகுதி 1-இன் கீழ் தண்டிக்கத்தக்கதாகும் என்று வாதிட்டார். இது தொடர்பாக, குருசுவாமி பிள்ளை -எதிர்- மாநில அரசு, 1991 (1) எம்.டபிள்யூ.என். (கிரிமினல்) 153 மற்றும்சுயம்புகனி -எதிர்- மாநில அரசு, 1989 எஸ்.சி.சி. ஆன்லைன் மெட்ராஸ் 481 என்ற வழக்குகளில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கற்றறிந்த இரு நீதியரசர்கள் அமர்வுகளின் முடிவுகளின் மீது சார்வுறப்பட்டுள்ளது.
8. இதற்கு மாற்றாக, கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மேல்முறையீட்டாளர் நீண்ட காலம் சிறையில் இருந்ததையும், மாவட்ட அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை உள்ளடக்கிய மாநில அளவிலான குழு, 16.2.2018-ஆம் தேதியன்று, மேல்முறையீட்டாளரின் பிரச்சினைக்கிடமற்ற நன்னடத்தை மற்றும் நீண்ட காலம் சிறையில் இருந்ததன் காரணமாக மேல்முறையீட்டாளரை விடுதலை செய்ய பரிந்துரைத்திருந்தது [பரிந்துரை, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநருக்கு/சிறைச்சாலைகளின் தலைமை ஆய்வாளருக்கு கடித எண் 4369/பி.எஸ்.1/2018 அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது] என்ற சங்கதியையும் கருத்தில் கொண்டு மேல்முறையீட்டாளருக்கு 01.02.2018-ஆம் தேதியிட்ட உள் (சிறை-IV) துறை அரசாணை (நிலை) எண் 64-இன் பலனையாவது வழங்க வேண்டும் என்றும், அரசாணை (டி) எண் 1127-இன்படி தமிழ் நாடு அரசால் 24.09.2019-ஆம் தேதியிடப்பட்ட விடுதலை நிராகரிப்பு ஆணை, குற்றத்தின் கொடூரமான மற்றும் மிருகத்தனமான தன்மையின் அடிப்படையில் தவறாகக் கருதப்பட்டுள்ளதால், இந்த நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் தீவிரமாக வாதிட்டார். பிரதிவாதி மாநிலத்தின் பணிந்துரைகள்:
9. ஒரே எதிர்மேல்முறையீட்டாளரான அரசுத்தரப்பில் முன்னிலையான கற்றறிந்த வழக்குரைஞர் வாதிடும்போது, மேல்முறையீட்டாளரின் செயல்(கள்) கொடூரமானது மற்றும் மிருகத்தனமானது என்றும், அவர் இளம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார் மற்றும் அவர்கள் இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளார், எனவே அரசு சரியாகத்தான் மேல்முறையீட்டாளரின் முன்கூட்டிய விடுதலையை நிராகரித்துள்ளது என்றார். விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டும் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்து தகுதி ஏதும் இல்லை என்ற காரணத்தால்தான் உயர்நீதிமன்றம் இ.த.ச., பிரிவு 302-இன் கீழ் தண்டனையை உறுதி செய்தது என்றும் சமர்ப்பித்தார். பகுப்பாய்வு, காரணம் மற்றும் முடிவு:
10. இந்த விடயத்தை விரிவாகப் பரிசீலித்த இந்த நீதிமன்றம், மேல்முறையீட்டாளர் அவரின் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்த சூழ்நிலையைப் பார்வையிடும்பொழுது, மேல் முறையீட்டாளர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. எனினும் கற்றறிந்த மூத்த வழக்குரைஞர் சிறந்தமுறையில் முயற்சி செய்தபோதும், மேல்முறையீட்டாளருக்கு மரணம் விளைவித்த குற்றம் கொலை குற்றமாகாது என்ற பலனை வழங்குவது கடினமானதாகும்.
11. மேலும் தொடர்வதற்கு முன், கீழ்க்கண்ட இ.த.ச., 299, 300, 302 மற்றும் 304-ஆம் பிரிவுகளை மீண்டும் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்: “299. மரணம் விளைவிக்கும் குற்றம் - மரணம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது மரணத்தை அநேகமாக விளைவிக்கக்கூடிய உடல் காயத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அத்தகைய செய்கையால் தாம் மரணம் அநேகமாக விளைவிக்கக்கூடும் என்ற அறிவுடன் ஒரு செய்கையைச் செய்வதன் மூலம் மரணம் விளைவிக்கிற எவரொருவரும் மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்தவராவார். எடுத்துக்காட்டுகள் (அ) மரணத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அதனால் மரணம் அநேகமாக விளைவிக்கப்படக்கூடும் என்ற அறிவுடன் ஒரு குழியின் மீது குச்சிகளையும் புல் பத்தைகளையும் 'அ' என்பவர் பரப்பி வைக்கிறார். 'ஔ' என்பவர் நிலம் உறுதியாக இருப்பதாக நம்பி அதன் மேல் நடக்கையில், உள்ளே விழுந்ததன் மூலம் கொல்லப்படுகிறார். 'அ' மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்திருக்கிறார். (ஆ) 'ஔ' என்பவர் ஒரு புதருக்குப் பின் இருப்பது 'அ' என்பவருக்குத் தெரியும். 'ஆ' என்பவருக்கு அது தெரியாது. 'ஔ'-வின் மரணத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அநேகமாக விளைவிக்கக்கூடும் என்று அறிந்திருந்து, 'ஆ'-வை அந்தப் புதரை நோக்கிச் சுடும்படி 'அ' தூண்டுகிறார். 'ஆ' சுடுவதன் மூலம் 'ஔ'-வைக் கொன்றுவிடுகிறார். இங்கே, 'ஆ' எந்தக் குற்றத்தையும் செய்யாதவராயிருக்கலாம். ஆனால் 'அ' மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்திருக்கிறார். (இ) ஒரு பறவையைக் கொன்று அதைத் திருடும் உட்கருத்துடன், 'அ' என்பவர் அதைச் சுடுகிறபோது, ஒரு புதருக்குப் பின் இருக்கிற 'ஆ' என்பவர் அங்கு இருப்பது தெரியாமல் அவரைக் கொன்றுவிடுகிறார். இங்கே 'அ' சட்டவிரோதமான செய்கை ஒன்றைச் செய்தார் என்றாலும், அவர் 'ஆ'-வைக் கொல்ல உட்கருத்துக் கொள்ளவில்லை அல்லது மரணத்தை அநேகமாக விளைவிக்ககூடியதாகத் தாம் அறிந்திருந்த ஒரு செய்கையைச் செய்யவில்லை, ஆகையால் அவர் மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்தவராக மாட்டார். விளக்கம் 1 - நலக்கேடு, பிணி அல்லது உடல் பலவீனத்தால், அவதியுறும் மற்றொருவருக்கு உடற்காயத்தை விளைவித்து, அதன்மூலம் அவருடைய மரணத்தை விரைவுபடுத்துகிற ஒருவர், அவருடைய மரணத்தை விளைவித்தவராகக் கொள்ளப்படுதல்வேண்டும். விளக்கம் 2 - உடற்காயத்தால் மரணம் விளைவிக்கப்பட்டிருக்குமிடத்து, தக்க பரிகாரங்களையும் திறமை வாய்ந்த சிகிச்சையும் மேற்கொணடிருந்தால் மரணத்தைத் தடுத்திருக்கலாமென்றாலும், அத்தகைய உடற்காயத்தை விளைவித்தவர் அந்த மரணத்தையும் விளைவித்ததாகக் கொள்ளப்படுதல்வேண்டும். விளக்கம் 3 - தாயின் கருப்பையில் உள்ள ஒரு குழந்தைக்குச் சாவு விளைவிப்பதானது மரணம் விளைவிப்பதாகாது; ஆனால், ஒரு குழந்தையின் பாகம் ஏதாவது வெளிப்பட்ட பிறகு, அந்தக் குழந்தை மூச்சு விடாமலிருந்தாலும் சரி அல்லது முழுமையாகப் பிறக்கவில்லை என்றாலும் சரி, அது ஓர் உயிருள்ள குழந்தைக்கு மரணத்தை விளைவிக்கும் குற்றமாகலாம்.
300. கொலைக் குற்றம் - இதற்குப் பின் விலக்கப்பட்டுள்ள நேர்வுகளில் தவிர, எந்தச் செய்கை மரணத்தை விளைவிக்கிறதோ, அந்தச் செய்கை மரணத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செய்யப்பட்டிருக்கிறதென்றால், அல்லது - இரண்டாவதாக – தீங்கு செய்யப்படுகிறவருக்கு மரணத்தை அநேகமாக விளைவிக்கக்கூடும் என்று குற்றவாளியின் அறிவுக்குப் படுகிற உடற்காயத்தை விளைவிக்கும் உட்கருத்துடன், அது செய்யப்படுகிறதென்றால், அல்லது மூன்றாவதாக – எவருக்கேனும் உடற்காயத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் அது செய்யப்பட்டு, உண்டாக்கக் கருதிய அந்த உடற்காயமானது, இயற்கையின் சாதாரணப் போக்கில் மரணத்தை உண்டாக்குதற்குப் போதுமானதாக இருக்கிறதென்றால், அல்லது நான்காவதாக – அந்தச் செய்கையைச் செய்கின்றவர், அது, பெரும்பாலும் உறுதியாக நிகழ்தற்குரிய மரணத்தையோ அல்லது மரணத்தை அநேகமாக விளைவிக்கக்கூடிய உடற்காயத்தையோ விளைவிக்கவோ செய்யும் என்னும் அளவுக்கு உடனடி அபாயகரமானது என்பதை அறிந்து, மரணத்தையோ மேற்சொன்னவாறான அத்தகைய காயத்தையோ விளைவிக்கும் ஆபத்தை மேற்கொள்வதற்கு யாதொரு காரணமுமில்லாமல் அத்தகைய செய்கையைச் செய்வாரானால், மரணத்தை விளைவிக்கும் குற்றம் கொலைக் குற்றமாகும். (அ) 'அ' என்பவர், 'ஔ' என்பவரைக் கொல்லும் உட்கருத்துடன் சுடுகிறார். அதன்விளைவாக 'ஔ' இறந்துவிடுகிறார், 'அ' கொலைக்குற்றம் செய்தவராவார். (ஆ) 'ஔ' என்பவர், ஒரே அடியால் அவரது மரணம் அநேகமாக விளையக்கூடும் என்ற அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார் என்பதை 'அ' என்பவர் அறிந்திருந்து, உடற்காயத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் அவரை அடிக்கிறார். அந்த அடியின் விளைவாக 'ஔ' இறந்துவிடுகிறார். நல்ல ஆரோக்கிய நிலையிலுள்ள ஒருவரது மரணத்தை இயற்கையின் சாதாரணப் போக்கில் விளைவிக்க அந்த அடி போதுமானதாக இல்லாமலிருக்கக்கூடுமானாலும், 'அ' கொலைக்குற்றம் செய்தவராகிறார். ஆனால் 'அ', 'ஔ' நோய் எதனாலும் அவதியுறுகிறார் என்று அறியாமல் நல்ல ஆரோக்கியத்தில் உள்ள ஒருவரை இயற்கையின் சாதாரணப் போக்கில் சொல்லக்கூடியதல்லாத அத்தகைய ஓர் அடியைக் கொடுக்குமிடத்து, அவர், உடற்காயத்தை விளைவிக்கும் உட்கருத்துக் கொண்டிருப்பினும், அவர் மரணத்தை விளைவிக்கவோ அல்லது இயற்கையின் சாதாரணப் போக்கில் மரணத்தை விளைவிக்கக்கூடிய அத்தகைய உடற்காயத்தை விளைவிக்கவோ உட்கருத்து கொண்டிருக்கவில்லையானால், கொலைக்குற்றம் செய்தவராகார். (இ) இயற்கையின் சாதாரணப் போக்கில் மரணத்தை விளைவிக்கப் போதுமான ஒரு வாள் வெட்டையோ அல்லது தண்டாந்தடிக் காயத்தையோ 'அ' என்பவர் 'ஔ' என்பவருக்கு உட்கருத்தோடு உண்டாக்குகிறார். அதன் விளைவாக 'ஔ' இறந்துவிடுகிறார். இங்கே, 'அ', 'ஔ'-வின் மரணத்தை விளைவிக்கும் உட்கருத்துக் கொண்டிருக்கவில்லையானாலும், கொலைக்குற்றத்தைச் செய்தவராவார். (ஈ) ஆட்கள் கூடிய ஒரு கூட்டத்திற்குள் காரணமேதுமின்றி, ஒரு வெடிமருந்து அடைக்கப்பட்ட பீரங்கியைச் சுட்டு, கூட்டத்தில் ஒருவரை 'அ' கொன்றுவிடுகிறார். 'அ' எந்தத் தனிப்பட்ட ஒருவரையும் கொல்லுவதற்கு முன்கூட்டித் திட்டமிட்டவராக இல்லாதிருக்கக்கூடுமாயினும், கொலைக் குற்றத்தைச் செய்தவராவார். விலக்கு 1 – மரணம் விளைவிக்கும் குற்றம், எப்பொழுது கொலைக் குற்றமாகாது - குற்றவாளி கடுமையாகவும் திடீரென்றும் ஆத்திரமூட்டப்பட்டு, தம்மை அடக்கிக்கொள்ளும் சக்தியை இழந்தநிலையில், ஆத்திரமூட்டியவருடைய மரணத்தை விளைவித்தால் அல்லது வேறு எவருடைய மரணத்தைத் தவறுதலாக அல்லது தற்செயலாக விளைவித்தால், மரணம் விளைவிக்கும் குற்றம் கொலைக் குற்றமாகாது. மேற்கண்ட விலக்கு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்- முதலாவதாக – ஆத்திரமூட்டப்படுதலானது, எவர் ஒருவரையும் கொலை செய்வதற்கு அல்லது அவருக்குத் தீங்கிழைப்பதற்குச் சாக்காக, குற்றவாளியால் நாடப்பட்டதாகவோ அல்லது தன்னிச்சையாகத் தூண்டப்பட்டதாகவோ இருத்தலாகாது. இரண்டாவதாக – அத்தகைய ஆத்திரமூட்டுதலானது, சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து செய்ப்பட்ட எதனாலேனும் அல்லது ஒரு பொது ஊழியர் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் சட்டப்படி செலுத்திய அதிகாரங்கள் எவற்றினாலேனும், ஏற்பட்டிருந்தலாகாது. மூன்றாவதாக – ஆத்திரமூட்டுதலானது, தற்காப்புரிமையைச் சட்டப்படி பயன்படுத்தும்போது. செய்யப்பட்ட எதனாலேனும் ஏற்பட்டிருத்தலாகாது. விளக்கம் - அத்தகைய ஆத்திரமூட்டுதலானது, அக்குற்றத்தைக் கொலைக் குற்றமாகாமல் தடுக்கப் போதுமான அளவு கடுமையானதாகவும், திடீரென ஏற்பட்டதாகவும் இருந்ததா என்பது சங்கதி பற்றிய பிரச்சினையாகும். (அ) 'ஔ' என்பவர் ஆத்திரமூட்டியதன் விளைவாக ஏற்பட்ட உணர்ச்சி வெறியின் வசப்பட்டு இருக்கும்போது, 'அ' என்பவர் 'ஔ'-வின் குழந்தையான 'ஓ'வைக் கொல்ல வேண்டுமென்ற உட்கருத்தோடு கொன்றுவிடுகிறார். அத்தகைய ஆத்திரமூட்டுதல் குழந்தையால் ஏற்படாமையினாலும், குழந்தையின் மரணமானது ஒரு செய்கையைச் செய்வதில் தற்செயலாகவோ அல்லது துப்பாக்கி வசமாகவோ, விளைவிக்கப்படாததாலும், இது கொலைக் குற்றமாகும். (ஆ) 'அ' என்பவருக்கு 'ஓ' என்பவர் கடுமையாகவும் திடீரென்றும் ஆத்திரமூட்டுகிறார். இந்த ஆத்திரமூட்டுதலின்பேரில் தமக்கு அருகிலுள்ள, ஆனால் தம்பார்வையில் இல்லாத 'ஔ' என்பவரைக் கொல்லவேண்டும் என்ற உட்கருத்தில்லாமலும், அநேகமாகக் கொல்லக்கூடும் என்று அறியாமலும், 'ஓ'வைப் பார்த்து ஒரு கைத்துப்பாக்கியால் 'அ' சுடுகிறார். 'அ', 'ஔ'வைக் கொன்றுவிடுகிறார். இங்கே, 'அ' கொலைக் குற்றம் செய்தவராகார்: ஆனால், மரணத்தை விளைவிக்கும் குற்றம் மட்டும் செய்தவராகிறார். (இ) 'ஔ' என்ற அமீனாவினால் 'அ' என்பவர் சட்டப்படி கைது செய்யப்படுகிறார். கைதானதால் 'அ' திடீரென்றும், கடுமையானதுமான வெறியால் கிளறப்பட்டும் 'ஔ'வைக் கொன்றுவிடுகிறார். ஆத்திரமூட்டுதல், ஒரு பொது ஊழியரால் அவர் அதிகாரத்தைச் செலுத்தும்போது செய்யப்பட்ட ஒன்றினால் ஏற்பட்டதாகையால், இது கொலைக் குற்றமாகும். (ஈ) 'ஔ' என்ற ஒரு நடுவர் முன்பு 'அ' என்பவர் சாட்சியாக முன்னிலையாகிறார். 'அ'-வின் சாட்சியத்தில் ஒரு வார்த்தையைக்கூட நம்பவில்லை என்றும், 'அ' பொய்ச் சாட்சி கூறியிருக்கிறார் என்றும், 'ஔ' கூறுகிறார். இந்த வார்த்தைகளால் 'அ' திடீரென்று வெறியால் உந்தப்பட்டு, 'ஔ'-வைக் கொன்று விடுகிறார். இது கொலைக் குற்றமாகும். (உ) 'அ' என்பவர் 'ஔ' என்பவரின் மூக்கைப் பிடித்து இழுக்க முயல்கிறார். தற்காப்புரிமையைப் பயன்படுத்தி, 'ஔ' 'அ'-வை அவ்வாறு செய்வதினின்றும் தடுப்பதற்கு அவரைப் பிடித்துக்கொள்கிறார். அதன்விளைவாக 'அ' திடீரென்று கடுமையான வெறியால் உந்தப்பட்டு, 'ஒள'-வைக் கொன்று விடுகிறார். ஆத்திரமூட்டுதலானது, தற்காப்புரிமையைப் பயன்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஒன்றினால் ஏற்பட்டதால், இது கொலைக் குற்றமாகும். (ஊ) 'ஔ' என்பவர் 'ஆ' என்பவரை அடிக்கிறார். இந்த ஆத்திரமூட்டுதலால் 'ஆ' கடுஞ்சீற்றத்தால் கிளறப்படுகிறார். பக்கத்திலிருப்பவரான 'அ' என்பவர் 'ஆ'-வின் சீற்றத்தைப் பயன்படுத்தி, அவரை, 'ஔ'-வைக் கொல்லச் செய்யும் உட்கருத்துடன், அதன்பொருட்டு 'ஆ'-வின் கையில் ஒரு கத்தியைக் கொடுக்கிறார். 'ஆ', 'ஔ'-வை அந்தக் கத்தியினால் கொன்று விடுகிறார். இங்கே, 'ஆ' மரணம் விளைவிக்கும் குற்றத்தை மட்டும் செய்தவராகலாம்; ஆனால் 'அ' கொலைக் குற்றம் செய்தவராவார். விலக்கு 2 – நல்லெண்ணத்தில், உடலில் அல்லது சொத்தின் தற்காப்புரிமையைப் பயன்படுத்துவதில், சட்டம் அவருக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தையும் மிஞ்சி, எவருக்கெதிராக அத்தகைய தற்காப்புரிமையைப் பயன்படுத்துகிறாரோ அவருடைய மரணத்தை முன் ஆலோசனையில்லாமலும், அத்தகைய தற்காப்பின் பொருட்டு தேவையானதற்கும் அதிகமான தீங்கை விளைவிக்கும் உட்கருத்தில்லாமலும், குற்றவாளி மரணத்தை விளைவிப்பாரானால், மரணம்விளைவிக்கும் குற்றம், கொலைக் குற்றமாகாது. எடுத்துக்காட்டு 'அ' என்பருக்குக் கொடுங்காயம் விளைவிக்காத வகையில், 'அ'-வை 'ஔ' என்பவர் குதிரைச் சவுக்கால் அடிக்க முயல்கிறார். 'அ' ஒரு கைத்துப்பாக்கியை வெளியில் எடுக்கிறார். 'ஔ' தாக்குதலில் தொடர்ந்து ஈடுபடுகிறார். வேறு எந்த வகையிலும் தாம் சவுக்கடி படுவதைத் தடை செய்ய முடியாதென்று நல்லெண்ணத்தில் நம்பி, 'அ' 'ஔ'-வைச் சுட்டுச் சாகடிக்கிறார். 'அ' கொலைக் குற்றம் செய்தவராகார்; ஆனால் மரணம்விளைவிக்கும் குற்றம் மட்டும் செய்தவராவார். விலக்கு 3 – குற்றவாளி, பொது ஊழியராக இருந்து அல்லது பொது நீதியின் மேம்பாட்டுக்காகச் செயற்படுகின்ற பொது ஊழியருக்கு உதவி புரிபவராக இருந்து, சட்டம் தமக்களித்திருக்கும் அதிகாரத்தை மிஞ்சுவதோடு, தம் கடமையை அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் உரிய வகையில் நிறைவேற்றுவதற்குச் சட்டப் பூர்வமானதென்றும் அவசியமானதென்றும் நல்லெண்ணத்துடன் தாம் நம்புகிற ஒரு செய்கையைச் செய்து, மரணம் விளைவிக்கப்பட்டவரின் மீது வெறுப்பில்லாமல் அந்தச் செய்கையின் மூலம் மரணம் விளைவித்தால், மரணம் விளைவிக்கும் குற்றமானது கொலைக் குற்றமாகாது. விலக்கு 4 – குற்றவாளி தகாத முறையில் தமக்கு அனுகூலம் தேடிக்கொள்ளும் வகையில் இல்லாமலோ, அல்லது கொடூரமான அல்லது அசாதாரணமான முறையில் நடந்து கொள்ளாமலோ, திடீர்த் தகராறில் உண்டான உணர்ச்சி வேகத்தில் ஏற்பட்ட திடீர்ச் சண்டையில் மரணம் விளைவிக்கும் குற்றம் முன் ஆலோசனையின்றிச் செய்யப்பட்டால், அது கொலைக் குற்றமாகாது. விளக்கம் - இத்தகைய சந்தர்ப்பங்களில் எந்தத் தரப்பினர் ஆத்திரமூட்ட முனைகிறார் அல்லது முதல் தாக்குதலைச் செய்கிறார் என்பது பொருட்டன்று. விலக்கு 5 – மரணம் விளைவிக்கப்பட்டவர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராயிருந்து, தம் சம்மதத்தின்பேரில் சாவுக்கு உட்படுத்திக் கொள்கிறபோதோ அல்லது இறக்கும் அபாயத்தை மேற்கொள்ளுகிறபோதோ மரணம் விளைவிக்கும் குற்றம் கொலைக் குற்றமாகாது. எடுத்துக்காட்டு பதினெட்டு வயதுக்குட்பட்ட 'ஔ' என்பவரை தன்னிச்சையாக, தூண்டுதலினால், 'அ' என்பவர் தற்கொலை செய்துகொள்ளும்படி செய்கிறார். இங்கே, 'ஔ'-வின் இளவயது காரணமாகத் தம் மரணத்துக்கு அவர் ஒப்புதல் தரும் திறனற்றவர்; ஆனால் 'அ' கொலைக் குற்றத்துக்கு உடந்தையாகிறார். xxx
302. கொலைக் குற்றத்திற்ககான தண்டனை - கொலை செய்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கும் உள்ளாக்கவும் செய்யலாம். xxx
304. கொலைக் குற்றமாகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்திற்கானத் தண்டனை - கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்கிற எவரொருவரும், ஆயுள் சிறைத்தண்டனையோ அல்லது பத்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் மரணம் விளைவிக்கும் அல்லது அநேகமான மரணம் விளைவிக்கக்கூடிய உடற்காயத்தை விளைவிக்கும் உட்கருத்துடன் மரணம் விளைவித்த செயல் செய்யப்படுமானால் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம். அல்லது மரணம் அநேகமாக விளைவிக்கக்கூடும் என்று அறிந்து, ஆனால் மரணம் விளைவிக்க வேண்டும் என்று அல்லது மரணம் அநேகமாக விளைவிக்கக்கூடிய உடற்காயத்தை விளைவிக்கும் என்ற எந்த உட்கருத்துமின்றி, அந்தச் செய்கை செய்யப்பட்டால், பத்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.”
12. இந்த வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளைப் பார்க்கும்பொழுது மேல்முறையீட்டாளரின் செயல்கள் இ.த.ச., பிரிவு 300-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகளில் வரவில்லை என்று நாங்கள் காண்கிறோம். மேலும் விஷம் அருந்தி இறந்தவர்களிடம் எந்த விதமான ஒப்புதலும் பெறப்படவில்லை. (மேற்கண்ட) குருசுவாமி பிள்ளை வழக்கில், தனது மைனர் மகளின் கழுத்தை பிளேடால் அறுத்து மரணமடைய செய்த தந்தை தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விசாரணையின்போது தந்தை மற்றும் மகள் இருவரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று இருவரும் கூட்டாக முடிவு எடுத்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. எனவே, அதில், மன நிலை, சமூக நிலை, நிதி நிலை மற்றும் அப்போதிருக்கும் சூழ்நிலைகள் போன்ற அந்தப் பின்னணியில், உயர் நீதிமன்றம், இ.த.ச., பிரிவு 302-லிருந்து இ.த.ச., பிரிவு 304 I ஆக மாற்றம் செய்து ஒரு பயனளிப்பது விவேகமானது என அறிந்தது.
13. இதேபோல், (மேற்கண்ட சுயம்புக்கனி வழக்கில், அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்திற்கு சற்று முன்பாக, குற்றம் சாட்டப்பட்டவரால் அவர் முறைகேடாக நடத்தப்பட்டு, தாக்கப்பட்ட வரலாறு உள்ளது, மேலும் விதிக்குரிய சம்பவ தினத்திற்கு ஒரு நாள் முன்னரும், சம்பவத்தன்றும் காலை மற்றும் மதிய உணவு நேரத்திலும் அவர் தாக்கப்பட்டுள்ளார், இது அவரை உடனடியாக அவரையும் அவர் இரண்டு குழந்தைகளையும், அவர்கள் வெளியே எடுக்கப்பட்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய தூண்டி உள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன, மேலும் அவர் காப்பாற்றப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் இ.த.ச., பிரிவு 302-இன் கீழ் மற்றும் இ.த.ச., பிரிவு 309-இன் கீழ் தண்டிக்கப்பட்டார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் குழந்தைகள் கூட அவரது தந்தையால் முறைகேடாக நடத்தப்பட்டிருந்தது, அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தபோது அவர்களின் உடலில் இருந்த பல சிராய்ப்புகள் மூலமும் மற்றும் எதிரியை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் உடம்பில் இருந்த காயங்கள் மூலமும் தெரிய வருகிறது. எதிரி ஒரு தாயாக அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்பி மற்றும் தனது வழித்தோன்றல்களை கைவிட்டு விட்டு செல்லாமல் இருப்பது தனது கடமை என்று கருதி, தான் மட்டும் தன் குழந்தைகளை விட்டு விட்டு தனியாக இறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரால் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை.
14. எனவே, மேல்முறையீட்டாளரால் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் அவற்றுக்குரிய சங்கதிகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. உண்மையில், அந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கண்ட வழக்குகள் எங்களை மேலும் தடுத்து நிறுத்தாது. ஆந்திர மாநிலம் v ராயவரபு புன்னய்யா, (1976) 4 எஸ்.சி.சி. 382 என்ற வழக்கினைப் பார்க்கும்பொழுதும் மேல்முறையீட்டாளர் பயனடையவில்லை. நாங்கள் உத்தரகாண்ட் மாநிலம் - எதிர்- சச்சேந்திர சிங் ராவத், (2022) 4 எஸ்.சி.சி. 227 வழக்கினையும் பரிசீலனை செய்தோம்.
15. அது எப்படியிருந்தாலும், தண்டனையை இ.த.ச., பிரிவு 302-லிருந்து இ.த.ச., பிரிவு 304 பகுதி I-இன் கீழ் ஒன்றாக மாற்றுவதற்கு இந்த நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை.
16. எவ்வாறாயினும், முன்கூட்டிய விடுதலைப் பிரச்சினையில், ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடயத்தில், 25.02.2018 அன்று குறைந்தபட்சம் பத்தாண்டுகள் சிறைவாசத்தை நிறைவுசெய்த சிறைக் கைதிகளுக்கு, முன்கூட்டியே விடுவிப்பதன் பலனைக் கொடுப்பது என்பது மறுப்பதற்கில்லை, அத்தகைய நோக்கத்திற்காக 01.02.2018-ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண் 64-இல், அத்தகைய பரிந்துரைகளைச் செய்ய அதிகாரம் பெற்ற மாநில அளவிலான குழு உள்ளது. தற்போதைய வழக்கில், மேல்முறையீட்டாளர் தனது கள்ள உறவு எந்த தொந்தரவு இல்லாமல் தொடர வேண்டும் என்பதற்காக தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார் என்றும் அந்த செயல் கொடூரமானது மற்றும் மிருகத்தனமானது என்று கருதி அரசால் மேல்முறையீட்டாளரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான மாநில அளவிலான குழுவின் ஆக்கப்பூர்வமான பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.
17. மேல்முறையீட்டாளர் தனது கள்ள உறவைத் தொடர வேண்டும் என்பதற்காக அவரது மகன்களை கொலை செய்ய எப்பொழுதும் முயற்சிக்கவில்லை, மாறாக அவரது கள்ள உறவை தொடர வேண்டாம் என்று முடிவெடுத்து, தானும் தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். கள்ள உறவு கொண்ட நபருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஏமாற்றம் மற்றும் விரக்தியால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் இங்கு சற்று நிறுத்தி கவனிக்கிறது. இந்த நீதிமன்றம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்து சமூகத்திற்கு போதனை செய்வதற்கான ஒரு நிறுவனம் அல்ல, மேலும் இதுகுறித்து நாங்கள் மேற்கொண்டு ஏதும் கூற விரும்பவில்லை, நாங்கள் சட்டமுறைப்படி நடப்பதற்கு கட்டுப்பட்டுள்ளோம்.
18. மேல்முறையீட்டாளரின் செயலை வெறுமனே 'கொடூரமானது மற்றும் மிருகத்தனமானது' என சாதாரணமாக முடிவு செய்ய முடியாது மேல்முறையீட்டாளரும் தனது வாழ்க்கையின் முடித்துக் கொள்ள முயன்றுள்ளார், ஆனால் அவரது கணவரின் உடன்பிறந்தார் மகளால் கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டுள்ளார். மேலும், காவல்துறை கூடுதல் இயக்குநரால்/சிறைத் துறை தலைவரால் 16.02.2018-ஆம் தேதியிட்ட கடிதம் எண்.4369/பி.எஸ்.1/2018 வாயிலாக வழங்கப்பட்ட மாநில அளவிலான குழுவின் பரிந்துரையிலும், மேல்முறையீட்டாளரின் பிரச்சினைக்கிடமற்ற நன்னடத்தையும் மற்றும் நீண்ட காலம் சிறையில் இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.
19. எனவே, மேல்முறையீட்டாளரை முன்கூட்டியே விடுவிப்பதற்கான மாநில அளவிலான குழுவின் பரிந்துரையை அரசு ஏற்காததற்கு சரியான காரணம்/நியாயமான காரணம் எதுவும் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்கவில்லை என்றாலும், மேல்முறையீட்டாள் (தாய்) விதியின் கொடூரமான கைகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. அதற்கான காரணத்தை மேற்கொண்டு விளக்க நீதிமன்றம் தவிர்க்கிறது.
20. மேற்கூறிய காரணங்களுக்காக, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரின் கையொப்பத்துடன் உள் (சிறை - IV) துறையால் வெளியிடப்பட்ட 24.09.2019 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணை (டி) எண் 1127 மூலம் மேல்முறையீட்டாளரின் முன்கூட்டிய விடுதலைக்கான வேண்டுகோளை நிராகரித்து பிறப்பித்த அரசாணை தள்ளுபடி செய்யப்படுகிறது.
21. முன்கூட்டிய விடுதலையைக் குறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரின் கையொப்பத்துடன் உள் (சிறை-IV) துறையால் 01.02.2018-ஆம் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 64-இன் பலனைப் பெற மேல்முறையீட்டாளர் தகுதியானவர் என முடிவு செய்யப்படுகிறது.
22. அதன்படி, மேல்முறையீட்டாளரை, வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால், உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்படுகிறது.
23. மேற்கூறிய வரையறைகளுக்கு உட்பட்டு இந்த மேல்முறையீடு முடித்து வைக்கப்படுகிறது. மாண்புமிகு நீதியரசர் திரு. அஜய் ரஸ்தோகி மாண்புமிகு நீதியரசர் திரு அஹ்சானுத்தீன் அமானுல்லாஹ் புது தில்லி 04.05.2023